தமிழ்நாடு

கூகுள் வரைபடத்தில் இணைகிறது நீலகிரி மலை ரயில்: ஆய்வுப் பணிகள் துவக்கம்

DIN

நீலகிரி மலை ரயிலை கூகுள் வரைபடத்தில் இணைப்பதற்கான ஆய்வுப் பணிகளை அந்நிறுவனத்தார் புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

நீலகிரி மலைகளின் இடுக்குகளிலும், எழில் கொஞ்சும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் நாள்தோறும் பயணிகளைச் சுமந்தவாறு தவழ்ந்து செல்கிறது மலை ரயில். ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதை இதுவாகும்.

குன்னூரில் உள்ள என்ஜின் மையம், தெற்கு ரயில்வேயில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும். இந்தப் பணிமனை கடந்த 1899ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். 

மேட்டுப்பாளையம்- குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி என்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதை பல இடங்களில் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரத்தின் உதவியுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. 

100 ஆண்டுகளுக்கு மேல் மலைப் பாதையில் நீராவி என்ஜின் இயக்கப்பட்டுள்ளதால், சற்று பழுதடைந்துள்ளது. மேலும், நிலக்கரி விலை உயர்வு காரணமாகவும் தற்போது உதகை - குன்னூர் இடையே மலை ரயிலில் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட பின், குன்னூரில் இருந்து உதகைக்கு மலை ரயில் 40 நிமிடங்களில் சென்றடைகிறது.

இந்த மீட்டர் கேஜ் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பு வாய்ந்த ரயிலாகத் திகழ்கிறது. 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும் உள்ளதாக, 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. 

இந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை 46 கி.மீ. தொலைவு செல்ல 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்கிறது. பசுமை நிறைந்த மலைகளின் நடுவே தவழ்ந்து வரும் இந்தக் குட்டி ரயில் நூற்றாண்டைக் கடந்துள்ளது.

இதில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நீலகிரி மலை ரயிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என ரயில்வே துறை, நீலகிரி பாரம்பரிய ரயில் பாதுகாப்புச் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.

இதைத் தொடர்ந்து 2005 ஜூலை 15-ஆம் தேதி டர்பன் நகரில் நடந்த உலகப் பாரம்பரியக் குழுவின் 29-ஆவது கூட்டத்தில் இக்கோரிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டது. அதன்பின் நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், உதகை ரயில் நிலையமும் மலை ரயிலும் உலக சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றன. 

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த 3 பேர் கொண்ட கூகுள் நிறுவனத்தினர் மலை ரயில் முன்பு நவீன கருவிகளைப் பொருத்தி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிறுவனம் இணையத் தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமாகும். 

அவர்கள் கல்லாறு, ஹில்குரோவ், ரன்னிமேடு, பழைய அருவங்காடு, கேத்தி, உதகை உள்ளிட்ட இடங்களில் மலை ரயிலை நிறுத்தி, தங்களுக்குத் தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டனர். இந்தப் பணிகள் நிறைவுற்றதும், விரைவில் மலை ரயில் கூகுள் வரைபடத்தில் இணைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT