தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொதுமக்களின் புகார்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை: அமைச்சர் கருப்பணன் 

DIN

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொதுமக்களின் புகார்கள் மீது ஆராய்ந்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 

வேதாந்தா குழுமத்தின் பிரதான நிறுவனமான  ஸ்டெர்லைட் லிமிடெட்,  இந்தியாவில் நேர்மின்முனை தாமிரம், எதிர்மின்முனை தாமிரம், கந்தக அமிலம் மற்றும் பாஸ்போரிக் அமிலம் ஆகியவை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் நிறுவுவதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதன் பேரில்,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை வழங்கியது.

கடந்த 20 ஆண்டுகளில் மேற்படி தொழிற்சாலை இரண்டு முறை தனது உற்பத்தி திறனை அதிகப்படுத்தியது.  தற்போது,  இத்தொழிற்சாலை, நாள் ஒன்றுக்கு 1200 டன் நேர்மின்முனை தாமிரம், 875  டன் எதிர்மின்முனை தாமிரம், 4200 டன் கந்தக அமிலம், 800 டன் பாஸ்பாரிக் அமிலம் என்ற உற்பத்தி திறனுடன் இயங்கி வருகின்றது. இத்தொழிற்சாலையால் வெளியேற்றப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகிறது.  புகைபோக்கியிலிருந்து வெளியேற்றப்படும் புகை, தகுந்த காற்று மாசு தடுப்பு சாதனங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

இத்தொழிற்சாலைக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இத்தொழிற்சாலையை 28.9.2010 அன்று மூட உத்திரவிட்டது.  இந்த உத்தரவினை எதிர்த்து, தொழிற்சாலை நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில்,  உச்சநீதிமன்றம் 1.10.2010 அன்று இடைக்கால தடை விதித்தது.  இதனைத் தொடர்ந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது 2.4.2013 நாளிட்ட இறுதி தீர்ப்பில், ஆலையை இயக்க உத்தரவிட்டதோடு, மேற்படி தொழிற்சாலை மாவட்ட ஆட்சியரிடம் ரூ.100 கோடியினை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை வைப்பு நிதியாக வைக்க வேண்டும் எனவும், அதிலிருந்து வரும் வட்டியினை கொண்டு சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டது. மாவட்ட ஆட்சியர் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 23.3.2013-ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு 29.3.2013 அன்று உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து, தொழிற்சாலை, தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன் முறையீடு செய்தது.  இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைத்தது. வல்லுனர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மூடுதல் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயக்குவதற்கு, 8.8.2013 அன்று தனது உத்தரவில், அனுமதி அளித்தது. மேலும், வல்லுனர் குழு பரிந்துரைத்த 10 நிபந்தனைகளை தொழிற்சாலை நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, மூடுதல் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து, மாண்புமிகு அம்மாவின் அரசு, 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

மாசு கட்டுப்பாடு சாதனங்கள் சரிவர இயக்கப்படுகின்றதா என்பதை வாரியத் தலைமையகத்திலுள்ள தொடர் காற்று கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்காணிப்பு செய்ததில், மாசு காரணிகளின் அளவு, மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ள அளவீடுக்குள் இருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இத்தொழிற்சாலைக்கான இசைவாணையினை 31.3.2018 வரை வழங்கியுள்ளது. மேலும், இசைவாணையினை புதுப்பிப்பதற்கு தொழிற்சாலை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது.

இத்தொழிற்சாலைக்கான இசைவாணையினை மேலும் புதுப்பிப்பதற்கு, தொழிற்சாலையால் நிறுவப்பட்டுள்ள மாசு தடுப்பு சாதனங்களின் செயல்திறன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள புகார் மற்றும் தொடர் காற்று கண்காணிப்பு மையத்தில் பதியப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் சட்ட விதிகளின்படி பரிசீலித்து வருகிறது.

தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையிலுள்ள வேதாந்த குழுமம், மேலும் ஒரு தாமிர உருக்காலையை (அலகு-2), தற்போது இயக்கத்திலுள்ள தாமிர உருக்காலைக்கு அருகில் துறைசார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சுற்றுச்சூழல் அனுமதி 1.1.2009 அன்று வழங்கியது.  இதன் அடிப்படையில், தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவாணையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வழங்கியுள்ளது.  அலகு-2ல் துவக்கப் பணிகள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.

அலகு-2ன் விரிவாக்கப்பணிகள் துவங்கப் பட்டிருப்பதை கண்டித்து ஆலையை சுற்றியுள்ள பொதுமக்கள் அரசுக்கு புகார்களை அளித்து வருகின்றனர். இதை அரசு கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT