முகப்பு
தமிழ்நாடு

புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: தொழிற்சங்கங்கள் நாளை ஆலோசனை

அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் புதன்கிழமை (மே 16) சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Updated On : 15 மே, 2018 at 1:41 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் புதன்கிழமை (மே 16) சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
இது குறித்து தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு, அதை மக்களவையில் தமக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றி உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஏழை மக்கள், ஓட்டுநர் பணிக்காக பெறக்கூடிய ஓட்டுநர் உரிமம் உள்பட அனைத்தும் தனியார் மூலம் வழங்கவும், அதற்காக பெரும் தொகையை செலவு செய்யவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்களைக் காரணம் காட்டி ஓட்டுநர்களுக்கு பல்வேறு கடுமையான தண்டனை, அபராதங்கள், உரிமம் பறிப்பு போன்றவற்றுக்கு வழி செய்கிறது. உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளால் இத்தொழில் முழுமையாக முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொதுப் போக்குவரத்துகளையும்
இச்சட்டத்தின் மூலம் முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பும் அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. இதை அகில இந்திய தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்க்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.