தமிழ்நாடு

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி: விரைந்து ஒப்புதல் வழங்க முதல்வர் வலியுறுத்தல்

DIN

மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதலையும், நிதி பங்களிப்பையும் அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மெட்ரோ ரயில் சேவைகளால் சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முக்கியமான வழித்தடமான நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் சின்னமலை முதல் ஏஜிடி.எம்.எஸ். வரையிலுமான வழித் தடம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்தப் புதிய வழித் தடத்தில் போக்குவரத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியது:
சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலும், விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேலும், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனுடைய கட்டுமானம் மற்றும் அமைப்புகளை நிறுவும் பணிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எப்போது நிறைவடையும்?:
மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்புப் பணிகள் வரும் 2020ஆம் ஆண்டு ஜூனுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தைச் செயல்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாதவரம் முதல் சிறுசேரி, சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றொரு வழித் தடத்தையும் இரண்டாவது கட்டமாகச் செயல்படுத்த கொள்கை அளவிலான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு ஆகியன விரைவில் வழங்க வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இதில், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர், மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலான 52.01 கிலோமீட்டர் நீளத்துக்கான வழித் தடப் பகுதிக்கு மட்டும் ஜப்பான் கூட்டுறவு முகமை கடனுதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இதற்கான நிதி பெறப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும்.
மேலும், 17.12 கிலோமீட்டர் நீளத்திலான புறநகர் பேருந்து நிலையம்கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடப் பகுதிக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி பெறுவதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது.
நான்காவது வழித்தடம்: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ள நான்காவது வழித்தடத்தை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை எடுத்துச் செல்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியையும் மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதைத் தவிர, விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரயில் பாதையை வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்து சென்னை நகரிலுள்ள துரித போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்படும்.
கோவையில் மெட்ரோ: சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவித்தபடி, கோயம்புத்தூர் மாநகரத்தில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான நிதியை ஜெர்மனி நிதி நிறுவனம் வழங்கவுள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தென் சென்னை, மத்திய சென்னை எம்.பி.,க்கள் ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் டி.வி.சோமநாதன் வரவேற்றார். மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் நன்றி தெரிவித்தார்.
ரயில் பயணம்: முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சென்னை எழும்பூரில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
ரூ.80,000 கோடியில் இரண்டாம் கட்டப்பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை மெட்ரோ ரயில் நிலைய இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு சுமார் ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மெட்ரோ ரயில் வழித்தட திட்ட தொடக்க விழாவில் அவர் பேசியது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ், சுமார் ரூ.80,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான முதலீட்டால், சென்னை பெருநகர் பகுதியில் பெருமளவிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படுவது மட்டுமல்லாது, வேலைவாய்ப்பு வசதிகளும் உருவாகும். 
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நிறைவடையும் நேரத்தில், சென்னை பெருநகர் உலகத் தரத்திலான போக்குவரத்து கட்டமைப்பைப் பெற்று நாட்டிலேயே முதன்மை நகரமாக மாறிவிடும்.
சென்னை பெருநகரத்துக்குள் எந்த ஒரு பகுதியில் இருந்தும் மற்றொரு பகுதிக்கு எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய இந்தப் பொது போக்குவரத்து வசதி பெரிதும் பயன்படும். மேலும், சென்னை நகரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக உருவாகும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
இன்று மட்டும் இலவசம்
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித் தடங்களில் (நேரு பூங்கா  சென்ட்ரல், சின்னமலை  தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.) சனிக்கிழமை இரவு வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது, சனிக்கிழமை அதிகாலை 5.45 மணி முதல் இரவு 10.30 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம்.
கட்டணம் என்ன?
சென்னையில் விமான நிலையம், பரங்கிமலையில் இருந்து கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா வரையும், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தப் பாதைகளில் நேரு பூங்காஎழும்பூர்சென்ட்ரல், சின்னமலைதேனாம்பேட்டை டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த இரு புதிய பாதைகள் திறக்கப்பட்டதால், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு, நேரு பூங்கா வழியாக சென்ட்ரல் வரையும், கிண்டி, சின்னமலை வழியாக தேனம்பேட்டை டி.எம்.எஸ். வரையும் மெட்ரோ ரயில்கள் வெள்ளிக்கிழமை இயங்கத் தொடங்கின. விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும், நேரமும் சேமிக்கப்படும். சென்ட்ரல்கோயம்பேடுக்கு பயணிகள் 17 நிமிஷத்தில் சென்றுவிடலாம். 
மெட்ரோ ரயில் கட்டணம்:

சென்ட்ரல்  விமானநிலையம் ரூ.70
எழும்பூர்  விமானநிலையம் ரூ.60
எழும்பூர்  சென்ட்ரல் ரூ.10
சென்ட்ரல்  கோயம்பேடு ரூ.40
தேனாம்பேட்டை டிஎம்எஸ்  விமானநிலையம் ரூ.50
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT