முகப்பு
தமிழ்நாடு

சென்னையிலும் அதிமுகவின் சர்கார் போராட்டம்: காசி, வெற்றி திரையரங்குகளில் பேனர்கள் கிழிப்பு 

மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிரான அதிமுகவின் போராட்டம் துவங்கியுள்ளது. 

Updated On : 8 நவம்பர், 2018 at 5:34 PM
பகிர்:

சென்னை: மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிரான அதிமுகவின் போராட்டம் துவங்கியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று  வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

Advertisement

இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள்; திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சர்கார் படக்குழுவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் போன்று செயல்படுகின்றனர். அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் புதனன்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக வியாழனன்று மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்ரியா திரையரங்கத்தின் வெளியே இந்த போராட்டம் நடைபெற்றது.

அதேபோல கோவையிலும் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு வெளியே அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிரான அதிமுகவின் போராட்டம் துவங்கியுள்ளது. 

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி, விருகம்பாக்கம் ஐநாக்ஸ் மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய திரையரங்கங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அங்கு கூடியுள்ள அதிமுகவினர் விஜய்க்கு எதிராக கடுமையாக கோஷங்கள் எழுப்பி வருவதோடு, திரையரங்க வாயில்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன்காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.