தமிழ்நாடு

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 17 பேர் சாவு: சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தகவல்

DIN

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் நிகழாண்டில் இதுவரை 17 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
 திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் வார்டுகளில் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு டெங்கு, பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. 2018 அக்டோபர் மாதத்தில் ஏறுமுகமாக இருந்த காய்ச்சலின் தாக்கம் தற்போது சமநிலைக்கு வந்துள்ளது.
 தமிழகத்தில் பரவும் காய்ச்சலில் 95 சதவீதம் வழக்கமான வைரஸ் காய்ச்சல்தான். டெங்கு, பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றின் சதவீதம் வெறும் 5 சதவீதமாக உள்ளது. இவற்றில்கூட ஒரு சதவீத காய்ச்சல் மட்டுமே சிக்கலானதாக உள்ளது. காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவைக் காண பல லட்சம் பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கிரிவலப் பாதையில் 36 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 பேர் காய்ச்சலுக்கான சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் தங்கள் வீடுகள், சுற்றுப்புறத்தை தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
 காய்ச்சல் ஏற்பட்டால், போலி மருத்துவர்களிடம் செல்லக் கூடாது. காய்ச்சலுக்கு ஊசி போடக்கூடாது. அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெறுவது நல்லது.
 தமிழகத்தில் 2017-இல் 23 ஆயிரத்து 900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 65 பேர் இறந்தனர். 2018-இல் இதுவரை 3 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 12 பேர் இறந்துள்ளனர். 2,750 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
 2017-இல் 3 ஆயிரத்து 800 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 17 பேர் இறந்தனர். 2018-இல் இதுவரை 110 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் இறந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை.
 திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை பாதிக்கும் வகையில், தேவையில்லாத போராட்டங்கள் நடைபெற்றது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. நீதிமன்றம் கூட போராட்டங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. நோயாளி ஒருவரை மருத்துவர் சரமாரியாக திட்டுவது போன்ற விடியோவும் கிடைக்கப் பெற்றது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT