தமிழ்நாடு

தொடங்கப்படாத புயல் சீரமைப்புப் பணி: 5 அரசு ஜீப்கள் தீவைத்து எரிப்பு

DIN

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் அரசு அதிகாரிகள் சென்ற 5 ஜீப்களுக்கு தீவைக்கப்பட்டன. மேலும், மர்மநபர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல் துணை கண்காணிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு, நிவாரணம் வழங்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் அதிகமான மரங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள் முறிந்துள்ளதால்  மின்தடை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாததைக் கண்டித்து ஆங்காங்கே சாலை மறியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், புயல் பாதிப்புக்குப் பிறகு அலுவலர்கள் ஊருக்குள் வராததைக் கண்டித்தும், சனிக்கிழமை மாலை  கொத்தமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.     இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் அப்பகுதியில் ஆய்வு செய்வதற்காகவும் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி,  கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்னாவதி, காவல் துணை கண்காணிப்பாளர் அய்யனார்,  வேளாண் உதவி இயக்குநர்  உள்ளிட்டோர் தங்களது ஜீப்களில் கொத்தமங்கலத்துக்கு சனிக்கிழமை இரவு சென்றனர். அங்கு, ஜீப்களை நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, மர்ம நபர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 ஜீப்களுக்கும் தீ வைத்தனர். இதில், 5 ஜீப்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், சிலர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதில் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அய்யனாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை உடன் இருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 
இதைத்தொடர்ந்து, மற்ற அலுவலர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீஸார், அரசு வாகனங்களுக்கு தீ வைத்தது, கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் தலைமையில் புதுகை மட்டுமின்றி திருச்சி, அரியலூர் போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து,  தேமுதிக தெற்கு மாவட்டத் தலைவர் மன்மதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.கொத்தமங்கலத்தில் தீவைத்து எரிக்கப்பட்ட அரசு ஜீப்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT