முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி ஆளுநருக்கு தனிச் செயலர் நியமனம்: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவநீதி தாஸின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு

Updated On : 9 அக்டோபர் 2018, 1:50 am IST
பகிர்:


புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவநீதி தாஸின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் நிதித் துறைச் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பி.சரவணன் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் செயலாளராகப் பணியாற்றி வந்த தேவநீதி தாஸின் பணிக் காலம் முடிவடைந்தது. அவரையே மீண்டும் தனது ஆலோசகராக நியமித்துக் கொள்ள மத்திய அரசிடம் ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் கோரினார். மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து தேவநீதி தாஸை தனது சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்க வேண்டும் என புதுச்சேரி தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் அனுப்பினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவநீதி தாஸ் ஓய்வு பெற்று விட்டதால், அவருக்குப் பதிலாக தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமித்துக் கொள்ளலாம் என தலைமைச் செயலர் ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்ட விரோதமாக ஆளுநர் கிரண் பேடியின் சிறப்புப் பணி அதிகாரியாக தேவநீதிதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாத ஊதியமாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 737 என்ற அடிப்படையில் கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் சிறப்பு பணி அதிகாரி என்ற ஒரு பதவியே கிடையாது. எனவே, ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ள தேவநீதி தாஸின் பணி நியமனம் செல்லாது என அறிவித்து அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு: இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது:- ஐஏஎஸ் அதிகாரி நியமனம் தொடர்பாக புதுச்சேரி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நடந்த ரகசிய கடிதம் மனுதாரருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து மனுதாரரும் மனு தொடர்பாக புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் நிதித் துறைச் செயலாளர் ஆகியோர் தனித் தனியாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.