முகப்பு
தமிழ்நாடு

ஒடிஸாவை நோக்கி டிட்லி புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், ஒடிஸா-ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல், கோபால்பூர் (ஒடிஸா)-கலிங்கப்பட்டினம் (ஆந்திரம்) இடையே

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:


வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், ஒடிஸா-ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல், கோபால்பூர் (ஒடிஸா)-கலிங்கப்பட்டினம் (ஆந்திரம்) இடையே வியாழக்கிழமை (அக்.11) காலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஒடிஸாவின் அனைத்து மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்; கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, செவ்வாய்க்கிழமை புயலாக மாறியது. டிட்லி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், ஒடிஸா மாநிலம், கோபால்பூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 530 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் தீவிர புயலாக மாறி, வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின்னர், கோபால்பூர் (ஒடிஸா)-கலிங்கப்பட்டினம் (ஆந்திரம்) இடையே வியாழக்கிழமை (அக்.11) காலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஒடிஸாவின் தெற்கு கடலோர மாவட்டங்களான கஜபதி, கஞ்சம், புரி மற்றும் ஜகத்சிங்பூரில் புதன்கிழமை முதல் இரு தினங்களுக்கு கனமழை பெய்யும். கேந்தரபரா, குர்டா, நயாகர், கட்டாக், ஜஜ்பூர், பத்ராக், பாலசோர், கந்தமால், தென்கனால் போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
பலத்த காற்று: ஒடிஸாவின் தெற்கு கடலோர பகுதிகளில் புதன்கிழமை காலையில் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, மாலையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இதேபோல், வடக்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வங்கக் கடலின் மத்திய, வடக்கு பகுதிகளில் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, சனிக்கிழமை வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸா அரசு தீவிரம்: ஒடிஸாவின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, உயரதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கஞ்சம், குர்டா, புரி ஆகிய மாவட்டங்களில் கடலோர கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாநில சிறப்பு மீட்புப் பணிகள் துணை ஆணையர் பி.கே.மொகபாத்ரா கூறுகையில், மீட்பு பணிகளுக்காக 300-க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மழையால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்காக 879 தற்காலிக முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
மேற்கு வங்கத்துக்கும் எச்சரிக்கை: ஒடிஸா-ஆந்திரம் இடையே கரையை கடந்த பிறகு, டிட்லி புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேற்கு வங்கத்தில் கங்கை சமவெளியையொட்டிய பகுதிகளில் வியாழக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் லூபன் புயல்
அரபிக்கடலில் உருவான லூபன் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென் மேற்கு அரபிக்கடலில் திங்கள்கிழமை மையம் கொண்டிருந்த லூபன் புயல், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் தற்போது ஓமனுக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கில் 800 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி, ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்லும். எனவே, மத்திய மேற்கு அரபிக் கடலுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்றார் அவர்.

தமிழகத்தில் மழை நீடிக்கும்
தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் 110 மி.மீ.: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருப்பூரில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கோவை மாவட்டம் மேட்டுபாளையம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →