டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மருத்துவ அவசர நிலையை அறிவியுங்கள்
டெங்கு, பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் அதிகம் பரவும் நிலையில் அரசு மருத்துவ அவசர நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி
டெங்கு, பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் அதிகம் பரவும் நிலையில் அரசு மருத்துவ அவசர நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சலைக் கண்டறியும் வசதிகளும், குணப்படுத்தத் தேவையான மருந்துகளும் இல்லை. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் சில வாரங்களுக்கு முன்பே தெரியத் தொடங்கி விட்ட நிலையில், அரசு உடனடியாக விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தியதுடன் அரசு அதன் கடமையை முடித்துக் கொண்டது. தேசிய அளவில் டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் ஆகும். கடந்த ஆண்டில் தமிழகத்தில் 23,294 பேர் பாதிக்கப்பட்டனர்; 65 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு 3,315 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். இதிலிருந்து தமிழக சுகாதாரத் துறை பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கையாக நோய்த்தடுப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் கடந்த காலங்கள் அளவுக்கு தீவிரமடையாமல் தடுக்க, தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையைப் பிரகடனம் செய்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.