மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 40 ஆண்டுகள் சிறை
தேன்கனிக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு
தேன்கனிக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம், நீலகிரி காலனியைச் சேர்ந்தவர் பாபு (33). தொழிலாளி. இவர், கடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி, பெற்றோர் இல்லாத நிலையில், வீடு புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், உறவினர்கள் அந்தச் சிறுமியை மீட்டனர்.
மேலும், பாபுவை பிடித்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, அப்போதைய காவல் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, வழக்குப் பதிந்து, பாபுவிடம் விசாரணை செய்தார். இதில், அவர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பாபுவை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்புக் கூறினார். அதில், வீடு புகுந்து சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.9,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.