முகப்பு
தமிழ்நாடு

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவிரைவு ரயில்-18 தயார்: வரும் 29-இல் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைப்பு

நாட்டிலேயே முதன்முறையாக, மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் 18 என்னும் அதிவிரைவு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்- 18. 
பகிர்:


நாட்டிலேயே முதன்முறையாக, மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் 18 என்னும் அதிவிரைவு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்காக ரயில்வே வாரியத்திடம் வரும் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் என்னும் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலமாக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே பொருள்களை தயாரித்து பயன்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே அதிவிரைவு ரயில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ரயில் -18 என்று பெயரிடப்பட்டு ரயில் பெட்டிகள் வடிவமைக்கும் பணி சென்னை ஐ.சி.எஃப்., தொழிற்சாலையில் நடந்து வந்தது. தற்போது பணிகள் நிறைவு பெற்று, புதிய தொழில்நுட்பத்தில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரயில் -18 தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில் என்ஜின் தனித்து இல்லாமல் பெட்டிகளுடன் இணைக்கப்பட்ட அமைப்பாக இருக்கும். இந்த ரயில் முதல்கட்டமாக பெருநகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது. சதாப்தி அதிவிரைவு ரயிலின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகம் கொண்ட இந்த ரயில் மூலம் 15 சதவீத பயண நேரம் குறையும்.
சிறப்பு அம்சங்கள்: ரயில் 18-இல் இரண்டு உயர்வகுப்பு பெட்டிகள், 14 சாதாரண பெட்டிகள் என இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 1,128 இருக்கைகள் கொண்டதாகவும், ஒய்-பை வசதியும், ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன. நவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்பு கூடம் மற்றும் விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்துப் பெட்டிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் உடைமைகள் அதிக அளவில் வைக்கக் கூடிய அளவிலும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் கதவுகளும், படிகளும் தானியங்கி முறையில் இயக்கப்படும்.
இந்த ரயிலின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஓட்டுநர் அறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரயிலில் அதிநவீன பிரேக்கிங் முறை பொருத்தப்பட்டுள்ளதை அடுத்து அதிவேகத்தில் செல்லும்போது மிக எளிதாக நிறுத்தவும், வேகமாக இயக்கவும் முடியும்.
இதுகுறித்து ஐ.சி.எஃப். உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
இந்தியாவிலேயே முதன்முறையாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதிநவீனவிரைவு ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத மூலப்பொருள்கள் உள்நாட்டிலேயே பெறப்பட்டு, இந்திய தொழில்நுட்பத்தால் ரூ.100 கோடி செலவில் 18 மாத காலத்தில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை வெளிநாடுகளில் தயாரித்து பெறுவதற்கு ரூ.200 கோடி வரை செலவாவதோடு, 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படுகிறது: இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்காக ரயில்வே வாரியத்திடம் அக்டோபர் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் பெறப்படும். இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப திறமைக்கு இந்த ரயில் எடுத்துக் காட்டாக இருக்கும் என்றார் அவர்.

 ரயில் 18 அதிவேக ரயிலில் அமைந்துள்ள இருக்கைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.