திடீர் உடல்நலக் குறைவு: திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட திருமாவளவன், பின்னர் மயிலம் அருகே கீழ்எடையாளம் பகுதியில் நடந்த தனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு, அங்கு மலை மீது உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயில் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை காரில் விக்கிரவாண்டி அழைத்து வந்துள்ளனர்.
அங்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காரில் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர். தொடர் பயணம், உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களால் அவருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிரை வழியே உயிர்ச்சத்து திரவங்கள் (டிரிப்ஸ்') ஏற்றப்பட்டது.
அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியிருப்பதால், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்பி விடுவார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.