சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்விலும், தமிழகத்திலும் மகிழ்வை நிறைக்கட்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வசந்த காலத்தின் வருகையை உணர்த்தும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.
சித்திரைத் திருநாள் என்பது காலங்களில் மட்டும் வசந்தத்தை ஏற்படுத்தினால் போதாது; தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும்; அவர்களின் உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியை நிறைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் ஆகும். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் அனைவர் வாழ்விலும் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பொங்க உழைக்க இந்த சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.