தமிழ்நாடு

ஜனநாயக உணர்வில்லாத மோடி ஆட்சியை அகற்றும் பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

DIN

சென்னை: ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த  ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுதந்திரம் பெற்ற 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அந்த வகையில் கடந்த 2004 முதல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மகத்தான சாதனைகளை புரிந்தது. அத்தகைய சாதனைகளை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குங்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்கிற வகையில் அமைந்திருக்கிறது. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். அதேபோல, ஆரம்ப மற்றும் தொடர் சுகாதாரம், குழந்தைகளின் ஊட்டச்சத்து, குடிநீர், துப்புரவு, மின் பகிர்வு போன்ற துறைகள் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றப்படும். மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் திருத்தம் கொண்டு வரப்படும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற வகையில் நீட் நுழைவுத் தேர்வு 2017, 2018 ஆம் ஆண்டுகளில் மத்திய - மாநில அரசுகளால் திணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலன்களை பாதுகாக்கிற வகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாநில அரசு விரும்புகிற வகையில்  தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் வரை போராடி, அனிதா தற்கொலை செய்து கொண்டதை எவரும் மறக்க இயலாது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனையில் உருவான திட்டக்குழுவை பா.ஜ.க. கலைத்துவிட்டது. அதற்கு மாறாக நிதி ஆயோக் என்கிற அமைப்பை அறிமுகப்படுத்தியது. அது செயல்படாமல் முடங்கியிருப்பதால் அதை கலைத்துவிட்டு மீண்டும் திட்டக் குழுவை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதேபோல, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு அன்னை சோனியா காந்தி அவர்களின் முயற்சியால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றபபட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரிக்காத காரணத்தால் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகிறது. மேலும் மகளிர் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு அரசு வேலை வாய்ப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்கிற வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.  காங்கிரஸ் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. மீண்டும் நிறைவேற்ற வாக்குறுதிகள வழங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

எனவே, ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகத் தூண்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த  ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT