தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு

DIN


இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 3 அடுக்குப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் தற்கொலை படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் முதல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு துப்பாக்கி ஏந்திய  போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேராலயம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 3 அடுக்குப் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்துக்குள் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 
இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 180 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை பகுதியில் நாகை மாவட்டத்தில் உள்ள 53 மீனவ கிராமங்களிலும் போலீஸார் 24 மணிநேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும்  கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலகப்  புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ஆகிய இடங்களிலும் 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை, கடலோர காவல் படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் , வனத்துறை ஆகியைவை இணைந்து கூட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது என்றார் விஜயகுமார். 
கோடியக்கரையில்...
நாகை மாவட்டம், கோடியக்கரை கடலோரப் பகுதியிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நிகழ்ந்த போருக்கு முன்பு, போராளிகளுக்கு ஆதரவான பகுதியாக இருந்த இடங்களில் வேதாரண்யம் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு தொடர்புடையவர்கள் தமிழக கடற்கரை வாயிலாக ஊடுருவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு தமிழக கடற்கரை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பரப்புடன் கூடிய கோடியக்கரை பகுதி இலங்கைக்கு அருகில் இருப்பதால் இங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோரக் கிராமங்களான மணியன்தீவு, கோடியக்காடு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், சிறுதலைக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடியக்கரையில் உள்ள இந்திய விமானப் படை கண்காணிப்புத் தளம், கடலோரக் காவல் குழும போலீஸார், தனிப்பிரிவினர் கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT