தமிழ்நாடு

தமிழ்ப் பல்கலை.யில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை

DIN

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.
தஞ்சாவூர் கீழ ராஜ வீதி அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 50 சதவீதச் சிறப்புக் கழிவு விற்பனை தொடக்க விழாவில்  பங்கேற்று மேலும் அவர் பேசியது: 
இந்தச் சிறப்புக் கழிவு விற்பனை மே 8-ம் தேதி வரை நடைபெறும். இப்பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை மூலம் இதுவரை 452 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், தமிழ் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வாங்கிப் பயனடைந்து வருகின்றனர்.தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 8 கோடி வழங்கியிருக்கிறது. பிரதிகள் இல்லாத நூல்களை மறு பதிப்பு செய்வதற்காக அரசு இந்த ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இதன் மூலம், நிகழாண்டு 193 நூல்களை மறுபதிப்புக்காகத் தமிழக அரசின் அச்சகத்துக்குக் கொடுத்துள்ளோம். அவை விரைவில் விற்பனைக்கு வந்துவிடும். இத்தொகையை வைத்து 452 நூல்களையும் மறுபதிப்பாகக் கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம். இந்த நிதி நல்கை மூலம் புதிய நூல்களையும் வெளியிடுவோம்.
நிகழாண்டு, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு உதவியுடன் 20 புதிய நூல்கள் அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 10 நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு, ரூசா நல்கையின் மூலம் ஏராளமான புதிய நூல்களையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சிறப்புக் கழிவு விற்பனை மூலம் ரூ. 3.50 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானது. இது, நிகழாண்டு இரட்டிப்பாகும் என நம்புகிறோம். நிகழாண்டு இந்தச் சிறப்புக் கழிவு விற்பனையை, வரவேற்பைப் பொருத்து கால நீட்டிப்பு செய்யப்படும் என்றார் துணைவேந்தர்.
முன்னதாக,  விற்பனையை உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன் தொடங்கி வைத்தார். இதில், பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார், பதிப்புத் துறை இயக்குநர் பா. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT