அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் விஜயன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வட மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை மலைசார்ந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். மத்திய மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ, வரை காற்று வீசக்கூடும். இதனால் அந்தப் பகுதிகளுக்கு 2 நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 15 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.