தமிழ்நாடு

போர்க்குற்றவாளியை தளபதியாக்குவதா? இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் 

DIN

போர்க்குற்றவாளியை ராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 2009-ஆம் ஆண்டு போரில் அப்பாவித் தமிழர்களை இனப் படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்த போர்க்குற்றவாளியை ராணுவத் தளபதியாக நியமித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கை ராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இலங்கை இறுதிப் போரில் மிகக்கடுமையான போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அரங்கேற்றியவர் ஆவார். இவரது தலைமையிலான 58-ஆவது படையணி தான் போரின் இறுதி கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2008-ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது படையணி உருவாக்கப்பட்டது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படையணியின் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் ஷவேந்திர சில்வாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவ்வளவு மோசமான பின்னணி கொண்ட ஷவேந்திர சில்வாவை ராணுவத் தளபதியாக நியமித்திருப்பதன் மூலம் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மீதும், இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் ஆர்வலர்கள் மீது சிங்கள இனவெறி அரசு கரியைப் பூசியிருக்கிறது.

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் போரில் தமிழர்களுக்கு எதிராக ஏராளமான போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டதை  விசாரணை மூலம் உறுதி செய்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம், அத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஷவேந்திர சில்வா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. அப்படிப்பட்டவரை தண்டிப்பதற்கு பதிலாக பதவி உயர்வு வழங்கி, கவுரவப்படுத்தியிருப்பதன் மூலம் இலங்கையில் இனியும்  மனித உரிமைகள் மதிக்கப்படாது; இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை எந்த வகையிலும் நியாயமாக நடைபெறாது என்பதை சிங்கள அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் இன்னும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஷவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் சாட்சியம் அளிக்கக்கூடாது என்று ஈழத்தமிழர்கள் மிரட்டப்படும் ஆபத்துகளும் உள்ளன.

இலங்கையில் எட்டாவது அதிபர் தேர்தல் வரும் நவம்பர் - திசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலில் இராஜபக்சேவின் கட்சி சார்பில் அவரது சகோதரரும், இலங்கைப் போரின் போது பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்து ஏராளமான போர்க்குற்றங்களை இழைத்த கோத்தபாய இராஜபக்சே போட்டியிடவுள்ளார். அவரை எதிர்கொள்ள வசதியாக இன்னொரு போர்க்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்து அதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி, சிங்கள பேரினவாத உணர்வைத் தூண்டி வெற்றி சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்தப் போக்கு தமிழர் நலனுக்கு நல்லதல்ல... இலங்கைப் போரில் சொந்தங்களை இழந்த ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதையே ராணுவத்தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது காட்டுகிறது.

ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டியதும், இலங்கைப் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதும் இந்திய அரசின் கடமை ஆகும். ஆகவே, இலங்கையின் ராணுவத்தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கைப் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT