தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்புப் பொருள் கண்டெடுப்பு 

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
 தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
 இதற்காக அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அப்போது மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்புப் பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
 மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவையும் கண்டறியப்பட்டன.
 தற்போது கீழடியில் மணிகள் அதிகமாக கிடைத்து வருவதால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், மணிகள் செய்தல் தொழிலில் சிறந்து விளங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 ஏற்கெனவே வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள மலைகளில் காணப்படும் அகேட் கல்லில் செய்யப்பட்ட அணிகலன்கள் கிடைத்தன. தற்போது சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் கிடைத்துள்ளன.
 சூது பவளம் என்ற அரிய வகை கற்கள் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம், சங்க காலத்தில் மதிப்புள்ள பொருளாக கருதப்பட்டுள்ளது.
 இந்த வகை கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
 ஏற்கெனவே கீழடியில் செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோக காசுகளை பயன்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
 அதேபோல் செப்புப் பொருளும் கிடைத்துள்ளதால், மண்டபாண்டப் பொருள்களுடன் அவர்கள் செப்பு பொருள்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
 விரைவில் அடுத்தகட்ட அகழாய்வு
 கீழடியில் அகழாய்வுப் பணிகளை சனிக்கிழமை தமிழக தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு செய்தார். இவரிடம் 5 - ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்டறிந்த தொல்பொருள்களை அதிகாரிகள் காட்டி விளக்கமளித்தனர். பின்னர் உதயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: அகழாய்வு மூலம் சங்ககால தொன்மையைப் பற்றி அரிய செய்திகள் கிடைத்துள்ளன.
 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடையும். ஏற்கெனவே நடந்த அகழாய்வில் கண்டறிந்த தொல்பொருள்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வருகின்றன. முழு ஆய்வறிக்கை வந்ததும் முடிவுகள் வெளியிடப்படும்.
 கீழடிக்கு அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அடுத்த கட்ட அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல்துறைக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளோம். விரைவில் அடுத்த கட்ட அகழாய்வு தொடங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT