புது தில்லி: மதுரை அருகே உள்ள கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய கால தமிழர் நாகரீகம் நிலவியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், மேற்கொண்டு விபரங்களைக் கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் இப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
முதற்கட்ட அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வுகளில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
அகழாய்வுகளின் முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் தனியான நகரம் ஒன்றை அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து முழுமையான விபரங்களைக் கண்டறியும் பொருட்டு கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.