தமிழ்நாடு

 பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 5 மடங்கு கூடுதல் நிதி: அமித்ஷா 

DIN


காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு வழங்கிய நிதியைவிட, 5 மடங்கு அதிகமாக பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது என்று  அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா  கூறினார்.
 நாகப்பட்டினம், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபும் ஆகிய மாவட்டங்களின் மக்களவைத் தொகுதிகளுக்கான பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கூட்டம் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
அதில் கலந்து கொண்ட அமித்ஷா பேசியது : 
பாஜகவின் தேர்தல் வெற்றி கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாஜக தொண்டர்களின் உழைப்பால்தான் முன்பு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.  ஆகவே வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியை வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன்.
 தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது என கருதாமல், அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ்- திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது நாட்டுக்கு அவசியம். 
மத்தியில் காங்கிரஸ், திமுக இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.  மிகப் பெரிய ஊழல் புரிந்தவர்களால் தமிழகத்துக்கும், தேசத்துக்கும் நல்லது செய்ய முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். 
 காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில்தான் ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என பல முறைகேடுகள் நடந்தன. ஆகவே திமுக-காங்கிரஸ் கூட்டணி என்றாலே அது ஊழல் கூட்டணி என்றே பொருள். பாஜக கூட்டணி என்றால் அது முன்னேற்றத்துக்கான கூட்டணி. 
 சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக  அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அவருக்குப் பதில் கூறத் தேவையில்லை என்றாலும் மக்களுக்காக மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிடுவது அவசியம்.
மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியிலிருந்தபோது ரூ.96,540 கோடி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழகத்துக்கு ரூ.5 லட்சத்து 42,068 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு வழங்கிய நிதியைவிட 5 மடங்கு அதிகமாக பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் தமிழகத்துக்கு தங்களது கூட்டணி ஆட்சியில் செயல்படுத்திய திட்டம், ஒதுக்கிய நிதியை பட்டியலிடமுடியுமா? அவர்களிடம் ஊழல் கணக்கு மட்டுமே உள்ளது. முன்னேற்றத்துக்கான கணக்கு இல்லை.   
  மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்பதை கூறமுடியுமா? திங்கள்கிழமை மாயாவதி, செவ்வாய்க்கிழமை அகிலேஷ்யாதவ், புதன்கிழமை சந்திரபாபுநாயுடு, வியாழக்கிழமை தேவேகெளடா, வெள்ளிக்கிழமை மம்தாபானர்ஜி, சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமராக இருப்பர். ஞாயிற்றுக்கிழமை பிரதமர் கிடையாது. அன்று விடுமுறை. இதுபோன்ற நிலையில் நாட்டை வழிநடத்த முடியுமா? ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நரேந்திரமோடியே பிரதமர். தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் மோடி பிரதமரானால், தமிழகம் நாட்டிலேயே முதல் நிலையை அடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆகவே பாஜக, அதிமுக, பாமக கூட்டணி வெற்றி பெற உழைப்போம். மீண்டும் மோடியை பிரதமராக்குவோம்  என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT