திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைந்ததையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு அவசரகதியில் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் வீசிய கஜா புயலின் காரணமாக அந்த மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இடைத்தேர்தல் நடந்தால் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ளது, எனவே இந்தச் சூழலில் இடைத்தேர்தல் நடத்தினால் அது வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்காது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், திரூவாரூரில் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தினால் முறைகேடு நடைபெறும். மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை.
மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணமடைந்தார். அந்த தொகுதிக்குத் தேர்தல் நடத்தாமல், ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்த கருணாநிதியின் தொகுதியான திருவாரூருக்கு மட்டுமே தேர்தலை நடத்துவது உள்நோக்கம் கொண்டது என்றார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் வாதிட்டதாவது: ஒரு எம்.எல்.ஏ இறந்து விட்டால், 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியைப் பொருத்தவரை பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொருத்தவரை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது, அங்கு வரும் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை கடந்த நவம்பர் மாதம் முடித்து வைத்ததாகக் கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், கஜா புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. மேலும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்படாதா என கேள்வி எழுப்பினர்.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தலைமைச் செயலாளர் முறையான அனுமதி பெற்று இந்த நிவாரணப் பணிகளையும், மீட்புப் பணிகளையும் மேற்கொள்ளலாம், அதற்கு தடை எதுவும் ஏற்படாது என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் அறிவிப்பால் கஜா புயல் நிவாரணப்பணிகள் தடைபடும் என்பதே மனுதாரரின் கோரிக்கை. எனவே இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கின்றோம். திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்து அறிவிக்கை வெளியிட தடை விதிக்க கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
எனவே மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறோம். பிரதான வழக்கு குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.