தமிழ்நாடு

நாட்டின் பாதுகாப்பில் ஸ்திரத்தன்மையை உருவாக்கியது பாஜக அரசு: பிரதமர் மோடி பெருமிதம்

தினமணி

நாட்டின் பாதுகாப்பில் ஸ்திரத்தன்மையை உருவாக்கியது பாரதிய ஜனதா அரசு என்றார் பிரதமர் நரேந்திரமோடி.

ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கடலூர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளின் பாஜக வாக்குச்சாவடிக் குழு நிர்வாகிகளுடன்  காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி  கலந்தாய்வுக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினார். ஈரோட்டிலுள்ள தனியார் திருமண அரங்கில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பாஜக வாக்குச்சாவடி நிர்வாகிகள், கட்சியின் நிர்வாகிகள் இந்த காணொலிக் காட்சி கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதில் ஈரோட்டைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சரவணன், பாதுகாப்புத் துறை முறைகேடுகளை பாஜக அரசு தடுத்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் பதிலளித்துப் பேசியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கிய அனைத்து நிகழ்வுகளிலும் இடைத்தரகர்களாக செயல்பட்ட அனைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் குடும்பத்தினருக்கு  நெருக்கமாக இருந்தவர்கள். கடந்த 2004 முதல் 2013 வரை 400க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் இவர்களது ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது.

அது, ராணுவத்தினரின் உயிரோடு விளையாடுவதாகும். ஆனால், பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியுடன் சேர்த்து, தீவிரவாத அச்சுறுத்தலை முறியடித்து தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாஜக அரசு நாட்டுப் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இடைத்தரகர்கள் இல்லாமலே ராணுவத் தளவாடங்களும், ராணுவ வீரர்களுக்கான ஆடைகளும் நேரடியாக வாங்கப்பட்டன. இதனால், நமது படைவீரர்கள் பாதுகாப்பான உடைகளுடன் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடும் நிலை  உருவாகி உள்ளது. 

கடந்த காங்கிரஸ்  ஆட்சியின்போது நாட்டின் பாதுகாப்பற்ற தன்மை சர்வதேச அளவில் அறியப்பட்டதால், மோதல்கள், தாக்குதல்கள் அதிகரித்தன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பின், தேவையான நேரத்தில், தேவையான இடங்களில் தாக்குதல் நடத்தி,  நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நம் தேசம் பாதுகாப்பாக உள்ளது.  கடந்த நான்காண்டுகளில் தேசமெங்கும் சகஜ நிலையைக் கொண்டுவர பல்வேறு நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில்,  ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன், ஈரோடு மக்களவைத் தொகுதி அமைப்பாளர் என்.பி.பழனிசாமி,  மாநிலச் செயலாளர் சி.கே.சரஸ்வதி, மாநில பிரசார அணி பொறுப்பாளர் ஏ.சரவணன்,  முன்னாள் எம்.பி. கார்வேந்தன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT