முகப்பு
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் பொதுக்காப்பீடு: பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர், பங்கேற்பாளர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவருக்கும்

Updated On : 24 ஜனவரி 2019, 1:38 am IST
பகிர்:


தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர், பங்கேற்பாளர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவருக்கும் பொதுக்காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வெளி விரட்டு, வட மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் போன்றவை திருவிழாக்களைப் போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இதில் சில எதிர்பாராத உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கோயில் தேர் திருவிழாக்களின் போது விபத்து காயம் போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால், அவர்களுக்கு உதவ அரசு சாரா பொதுக்காப்பீடு செய்யப்படுகிறது. இதுபோல ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுக்களிலும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு அரசு சாரா பொதுக்காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்ற அனைத்து மாடிபிடி வீரர்களுக்கும் மத்திய அரசுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வு முழுமைக்கும் காப்பீடு செய்ததற்கான ஆவணங்களை ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் தாக்கல் செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்களில் மாடுபிடி வீரர்கள், பங்கேற்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவருக்கும் பொதுக்காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.