ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இதன் காரணமாக அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு
கைவிடப்பட்டது. எனவே அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என கூற முடியாது. மேலும் மனுதாரர், அரசு செலவில் நினைவிடம் கட்டக்கூடாது என வழக்குத் தொடர்ந்துள்ளாரே தவிர, இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்க்கவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசுக்கு கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.