தமிழ்நாடு

இன்று முதல் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர்

DIN


ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை முதல் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. 
சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு ரூ. 65 கோடி நிதி ஒதுக்கி, அதற்காக பணிகளை மேற்கொண்டுள்ளது. 
இதற்காக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான இடத்தைத் தேர்வு செய்தனர்.
அதன்படி, மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 50 வேகன்களைக் கொண்ட ரயில் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
மொத்தம் 50 வேகன்கள் உள்ள இந்த ரயிலில் சோதனை ஓட்டமாக இரு நாள்களுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு முறை கொண்டு செல்லப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இருமுறை கொண்டு 
செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ராட்சத குழாய் மூலம் ரயில் நிலையத்துக்கு விநியோகமாகும் குடிநீரை வேகன்களில் ஏற்றுவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் பரிசோதிக்கப்படுகிறது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: 
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில், 18 பொறியாளர்கள், 250 ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ராட்சத குழாய் அமைக்கும் பணி தாமதமானதாலும், ஆங்காங்கே நீர்க் கசிவு ஏற்பட்டதாலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தாமதமானது. வியாழக்கிழமை மாலை 27 வேகன்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு விட்டது. தொடர்ந்து, இரவுக்குள் 50 வேகன்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் 
என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT