தமிழ்நாடு

முகநூல் அவதூறு காணமாக கடலூரில் இளம்பெண் தற்கொலை: பின்னணி குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை 

DIN

சென்னை: முகநூல் அவதூறு காணமாக கடலூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தின் பின்னணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி பன்னீர், அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார் ஆகிய இருவரும் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவர் மீதும் அங்குள்ள காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

அருகிலுள்ள வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை பிரேம்குமார் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் விக்னேஷ் உதவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை பழிவாங்க திட்டமிட்டனர். அதுமட்டுமின்றி, ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் நீலகண்டன், அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு நீலகண்டனின்  வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து விட்டதாகக் கூறி, அந்த படத்தையும் காட்டியுள்ளனர். அத்துடன் அவர் மணம் முடிக்கவுள்ள விக்னேஷை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ்  அடித்து கொலை செய்யப்பட்டு, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல் தான் விக்னேஷை கொடூரமாக படுகொலை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கடலூர் மாவட்ட காவல்துறை, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதை கைவிட வேண்டும். விக்னேஷை படுகொலை செய்ததுடன், ராதிகாவின் தற்கொலைக்கும் காரணமாக இருந்த கும்பலை கைது செய்து கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும். அதன்மூலம் கடலூர் மாவட்ட காவல்துறை அதன் நடுநிலையை நிரூபிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT