முகப்பு
தமிழ்நாடு

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் ஊரில் மழை பெய்யலாம்!

தமிழகத்தை பருவ மழை ஏமாற்றி விட்டாலும், கோடை வெயில் நிச்சயம் ஏமாற்றாது என்பதை கடந்த வாரம் முதலே நிரூபித்து வருகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:20 AM
பகிர்:


சென்னை : தமிழகத்தை பருவ மழை ஏமாற்றி விட்டாலும், கோடை வெயில் நிச்சயம் ஏமாற்றாது என்பதை கடந்த வாரம் முதலே நிரூபித்து வருகிறது.

மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இதுவரை விடுக்கப்படாத எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அது என்னவென்றால் அனல் காற்று வீசும் என்பதே. 

ஏற்கனவே அனல் தகித்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் தமிழக மக்கள் மனம் நொந்து போனார்கள்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே திருத்தணி, கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயில் சதமடித்தது. சதமடித்திருந்தால் கூட பரவாயில்லை. 104 டிகிரி அளவுக்கு தகித்துச் சென்றது. இன்று வெயில் அதிகம் என்று சொல்லாத ஆட்களே இல்லை எனும் அளவுக்கு வெயில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், மார்ச் 8ம் தேதி காலை ஆங்காங்கே கருமேகக் கூட்டங்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி சுற்றி வந்தன. பருவ மழை பொய்த்துப் போனதால் யார் யார் எப்படி இருக்கிறார்கள்? என்பதை வேவு பார்க்க வந்தவர்கள் போல வந்து சில நொடிகளில் மாயமாகிவிட்டன அந்தக் கரு மேகங்கள்.

இந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஒரு அறிவிப்பு சற்று மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அது என்னவென்றால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.

என்ன.. எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டனர். வேவு பார்த்துச் சென்ற மழை மேகங்களுக்கு மட்டுமே அது தெரியும் போல.. அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் இருக்கும் ஊரில் மழை பெய்யலாம். இல்லை செய்தியில் பார்த்து அங்கலாய்க்கலாம். அவ்வளவுதான்.
 

முழு கட்டுரையைப் படிக்க →