முகப்பு
தமிழ்நாடு

திமுக தவிர வேறு கட்சிகளுக்கு போடும் ஓட்டால் பாஜகவிற்கே மறைமுகப் பயன்: கொளத்தூர் மணி

திமுக தவிர வேறு கட்சிகளுக்கு போடும் ஓட்டால் பாஜகவிற்கே மறைமுகப் பயன் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

Updated On : 22 மார்ச், 2019 at 5:30 PM
பகிர்:

திருப்பூர்: திமுக தவிர வேறு கட்சிகளுக்கு போடும் ஓட்டால் பாஜகவிற்கே மறைமுகப் பயன் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண்ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி

Advertisement

கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில்வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தோம், அரசின்அடக்குமுறைகளை சந்தித்தோம்

நடுவண் ஆட்சி தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்துசெயல்பட்ட பாஜக அது கற்பனைக் கனவு என்பதை புரிந்துகொண்டது. மக்கள் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக வலிமையானதலைமையை இழந்துவிட்ட சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆட்சி ஆளும்கட்சியை மிரட்டியது; கட்சியைஉடைத்தது; பிறகு மீண்டும் இணைத்தது. தங்களின் அதிகார வலைக்குள்  சிக்கவைத்து பொம்மலாட்டம் நடத்தியது.

மிரட்டலுக்கு அடிபணிந்து ஆளும்கட்சியும் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல் களத்திற்குவந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாஜக ஆட்சியையும் அதன் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து கைகோர்த்து நிற்கும் அஇஅதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும்என்பதே தமிழர்களின் ஒற்றை முழக்கமாக மாறி நிற்கிறது

இந்த சூழலில் பாஜக ஆட்சியைத் தோற்கடித்து தமிழர்களின் தன்னுரிமையையும் தன்மானத்தையும் நிலைநாட்ட திமுக கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து மகத்தான வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று எப்போதும் மக்களின் உரிமைகளுக்காகவே களத்தில் நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக மக்களை உரிமையோடும் உணர்வோடும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பாஜக ஆட்சி மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களை ஏதோ அன்னிய தேசத்தவர்கள் போலவும் தேச விரோதிகளாகவும் சித்தரித்து அவர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து இரண்டாம் தர குடிமக்களாக்கியது; பாரதீய ஜனதாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கடமை இஸ்லாமிய சமூகத்திற்கு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை தோற்கடிக்கக் கூடிய வலிமையான கூட்டணி திமுக அணியாகவே இருப்பதால் இஸ்லாமிய சகோதரர்கள் இயக்க நலனை முன்னிறுத்தாமல் சமூக நலன் கருதி திமுக அணியை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

வேறு கட்சிகளுக்கு போடும் ஓட்டு மறைமுகமாக பாஜகவிற்கே பயனளிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.