திருவொற்றியூர்: பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தமிழகத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக இருந்து வரும் நிலையில் விதிமுறை நீக்கம் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வாக அமையுமா என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயத்தின் பின்னணி: மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, விதி 8-ன்படி வாகன ஓட்டுநர் உரிமங்கள் பெறுவதில் இரண்டு வித நடைமுறைகள் உள்ளன. இதன்படி சொந்த வாகனங்களை இயக்குவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவை இல்லை. ஆனால் பொது போக்குவரத்து, வணிகம் சார்ந்த வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமத்துடன் வில்லையும் (பேட்ச்) பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பேட்ச் பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனால், 8-ஆவது படிக்காத லட்சக்கணக்கானோர் பேட்ச் கிடைக்காமல் கனரக வாகனங்களை ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பயிற்சிப் பள்ளி ஒன்றின் மூலம் ஓட்டுநர் பயிற்சியை மேற்கொள்ளும் ஒருவர் படிக்காதவராக இருக்கும்பட்சத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் சமிக்ஞை அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடியாது. மேலும் உரிமம் பெற மேற்கொள்ள வேண்டிய பதிவுகள், சரக்குகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது சரக்கு குறித்த ஆவணங்களைச் சரிபார்த்தல், சுங்கச்சாவடி மற்றும் களச் சோதனையின் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தல் உள்ளிட்டவற்றை படிக்காதவர்களால் திறம்படச் செய்ய முடியாது. மேலும் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும்போது படிக்காத ஓட்டுநர்களால் சிக்கல் ஏற்படுகிறது என்பதால் குறைந்தபட்ச கல்வித் தகுதி விதியை ரத்து செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது.
22 லட்சம் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு: மத்திய அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, இந்த விதியை மாநில அரசுகள் கடுமையாக அமல்படுத்தத் தொடங்கின. இதனால், கடந்த 15 ஆண்டுகளில் ஓட்டுநர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஒருபுறம் வணிக, கனரக வாகன உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் மறுபுறம் இவற்றை இயக்குவதற்குத் தேவையான ஓட்டுநர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. நாடு முழுவதும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி சுமார் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படித்தவர்கள் இத்தொழிலுக்கு வர மறுப்பதால் திறமையான ஓட்டுநர்கள் கிடைக்காததோடு, போதிய அனுபவம் இல்லாதவர்கள், மது அருந்தும் பழக்கமுடைய ஓட்டுநர்களை வைத்து வாகனங்களை இயக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. இதன்மூலம் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
வாடகைக் கார்களை ஓட்டவும் ஆட்கள் இல்லை: மேலும் ஊபர், ஓலா உள்ளிட்ட கால் டாக்சிகள் இந்தியச் சந்தையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், இக்கார்களை இயக்குவதற்கு போதிய ஓட்டுநர்கள் கிடைப்பதில்லை. சொந்தமாக வாகனங்களை வாங்கி ஓட்டுநராக விரும்புபவர்கள் கூட 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் பேட்சுடன் கூடிய உரிமம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதனால், பெரும்பாலான படித்த இளைஞர்கள் ஓட்டுநராக விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது. பொதுவாக பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியா முழுவதும் கனரக ஓட்டுநர்களாக நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர். கல்வித் தகுதி விதிமுறை இவர்களையும் பாதித்துவிட்டது.
இந்நிலையில், பிரச்னையின் தாக்கத்தை புரிந்து கொண்டு மத்திய அரசு இந்த விதிமுறையை கடந்த செப். 23-ஆம் தேதி நீக்கியது. இதைத் தொடர்ந்து, இதற்கான அறிவிக்கையை, தமிழக அரசு கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிட்டது.
போதிய பயிற்சி மையங்கள் தேவை: இது குறித்து டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.பெருமாள், செயலாளர் எஸ்.ஆர்.ராஜா கூறியது:
கனரக வாகனங்களான சரக்கு, டேங்கர், கன்டைனர் டிரைலர் லாரிகளை இயக்குவதற்கு அனுபவம் பெற்ற ஓட்டுநர்கள் அவசியம். முன்பு ஓட்டுநராக விரும்பும் இளைஞர்கள் முதலில் லாரிகளில் கிளீனராக வேலைக்குச் சேருவார்கள். பின்னர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஓட்டுநரின் உதவியுடன் லாரிகளை இயக்க பழகுவார்கள். இவ்வாறு கிளீனராக இருந்து ஓட்டுநராக உயர்வதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகிவிடும். இந்நிலையில்தான் குறைந்தபட்ச கல்வித் தகுதி விதிமுறையை புகுத்தினார்கள். இதன் மூலம், தற்போது 95 சதவீத லாரிகள் கிளீனர்கள் இல்லாமல்தான் இயக்கப்படுகின்றன. மேலும், லாரி ஓட்டுநர் என்றாலே சமுதாயத்தில் தாழ்வுநிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், தற்போது டிரைலர் லாரிகளை ஓட்டினால் மாதம் ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும் ஓட்டுநர்கள் கிடைப்பதில்லை. இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து மாவட்டம் தோறும் ஓட்டுநர் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். இதில் வாகன உற்பத்தி நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும். இவைகளையெல்லாம் மேற்கொள்ளாமல் கல்வித் தகுதி நீக்கம் என்பது மட்டுமே நீண்டகாலமாக இருந்து வரும் பற்றாக்குறை இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்து விடாது என்றார் ராஜா.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான "திறன்மிகு இந்தியா' (நந்ண்ப்ப் ஐய்க்ண்ஹ) திட்டத்தின்படி ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை ஏற்படுத்தி திறமையான ஓட்டுநர்களை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.