அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில்?
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும்.
மணிக்கு 40 கி.மீ. - 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், குமரி கடல், மாலத்தீவு பகுதி, லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 16 செ.மீ. மழையும், மயிலாடுதுறையில் 14 செ.மீ. மழையும், புதுக்கோட்டையில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று கூறினார்.
மேலும், லட்சத் தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.