முகப்பு
தமிழ்நாடு

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 5-ம் இடம்!

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55.4% அளவிற்கு அதிகரித்துள்ளது.

Updated On : 5 அக்டோபர், 2019 at 3:02 PM
பகிர்:

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55.4% அளவிற்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு (American Community Survey) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்கள், சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களில் 21.8 சதவீதம் பேர் அவர்களது வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து பிறமொழி பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதிலும், அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இந்தி முதல் இடத்தையும், தமிழ் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும். இந்த எண்ணிக்கை 1990ம் ஆண்டை விட இருமடங்காகவும், 1980ம் ஆண்டை விட மும்மடங்காகவும் அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இந்த ஆய்வறிக்கை ஒப்பிட்டுகையில் 50 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இந்த எட்டு ஆண்டில் 80 ஆயிரம், இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சென்று குடியேறியுள்ளனர்.

Advertisement

அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 8.63 லட்சம் பேர் பேசுவதாக குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தியை 4.34லட்சம் பேரும், தெலுங்கினை 4.15லட்சம் பேரும் பேசுகின்றனர். இதையடுத்து பெங்காலியும் ஐந்தாவது இடத்தில் தமிழும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ‘குடியேறுதல் ஆய்வுகளுக்கான மையம்’ 2010ம் ஆண்டு புள்ளி விவரங்களை 2017ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்துள்ளது. அதன்படி,

கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது 2லட்சத்து 23 ஆயிரம் பேர் பெங்காலியையும், ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் தமிழ் மொழியையும் பேசுகின்றனர்.

ஆனால், பட்டியலில் இடம்பெற்றுள்ள பெங்காலி, தமிழ் மற்றும் உருது மொழிகள் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளிலும் பேசப்படுகின்றது. இந்தியாவை தவிர்த்து தமிழ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் பரவலாக பேசப்படுகிறது. வங்கதேசத்தின் தேசிய மொழியாக பெங்காலியும், பாகிஸ்தானின் தேசிய மொழியாக உருதும் விளங்குகிறது. ஆனால், அந்த எண்ணிக்கைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 87,543 தெலுங்கு பேசுபவர்கள் இருந்தனர். இது 2010ம் ஆண்டில் 2,22,977 ஆக உயர் ந்துள்ளது. அதுவே 2017ம் ஆண்டு வாக்கில் 4,15,414 ஆக உயர்ந்திருக்கிறது. ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்காவுக்கு ஐடி கம்பெனியில் பணிபுரிய, அதிகமாய் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து மக்கள் செல்வதே, தெலுங்கு மொழி பேசும் மக்கள் தொகை பெருகி வருவதற்கு ஒரு முக்கியக் காரணி என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதேபோல், 2000ம் ஆண்டில் இந்தி பேசுபவர்களது எண்ணிக்கை 3,17,057 பேராக இருந்துள்ளது. இது 2010ம் ஆண்டு 6,09,395 ஆகவும், 2017ம் ஆண்டு 8,63,077 ஆகவும் உயர்ந்துள்ளது. அவ்வாறே, குஜராத்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டில் 2,35,988 ஆக இருந்தது. 2010ம் ஆண்டில் 3,56,394 ஆக உயர்ந்து 2017ல் 4,34,264 ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.