முகப்பு
தமிழ்நாடு

ஆவின் முறைகேடுகளை முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும்: இ.கம்யூ கோரிக்கை 

ஆவின் முறைகேடுகளை முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:06 AM
ஆவின் பால்
பகிர்:

சென்னை: ஆவின் முறைகேடுகளை முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு நிறுவனமான ‘ஆவின்’ மூலம் பால் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் கொள்முதல் விலை உயர்ந்தப் பட்டது. உயர்த்தப்பட்ட விலை இன்னும் கிடைக்கவில்லை என பால் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் விற்பனை விலையும் உயர்ந்தப்பட்டது. ஆவின் நிறுவனத்தில் பால் எடுத்து, மாதாந்திர அட்டைதாரர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கும் பால் விநியோகம் செய்து வரும் முகவர்களின் கழிவுத் தொகையும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது. முகவர்களுக்கு உயர்த்தப்பட்ட கழிவுத் தொகையில் 50 சதவீதம் வரை ஆவின் அதிகாரிகள் கேட்பதாகவும், அதனைத் தர முடியாது எனில் 1000/2000 லிட்டர் பால் எடுத்து விநியோகம் செய்து வரும் முகவர்களை நீக்கி விட்டு, தனியார் பெரும் நிறுவனங்களிடம் பால் விநியோகப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என மிரட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

இதனால் நூற்றுக்கணக்கான பால் முகவர்கள் பாதிக்கப்படுவார்கள். நுகர்வோர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். சிறு முகவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிர்வாகம் செய்ய இயலவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. சென்னை பெருநகரில் மட்டும் தினசரி 12 லட்சம் லிட்டர் பால் விநியோகம் நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொண்டால் இதில் கைமாறும் தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை முதலமைச்சர் தலையிட்டு தடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தில் 1000 லிட்டர் பால் எடுத்து விநியோகம் செய்யும் சிறு சிறு முகவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments