தமிழ்நாடு

ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு: செப்.18 முதல் அமல்

DIN

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களின் விலையும்  உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் புதன்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும்,  ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 உயர்த்தப்படும் என்று ஆவின் பால் நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  இதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்களும் பால் விலையை  உயர்த்தி வருகின்றன.  

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள், பொருள்களின் விலையும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பால் பொருள்களின் விலை  உயர்வை ஆவின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.  

ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நெய், பால் பவுடர், பன்னீர் உள்ளிட்ட பொருள்கள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் நெய் விலை ரூ.35-ம்,  ஒரு கிலோ பால் பவுடர் விலை ரூ.50-ம்  உயர்த்தப்பட்டுள்ளது.  

ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.460-இல் இருந்து ரூ.495 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது லிட்டருக்கு ரூ.35 உயர்வு கண்டுள்ளது.  ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பால் பவுடர் தற்போது ரூ. 320 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் வெண்ணெய் அரை கிலோ ரூ.230-இல் இருந்து ரூ.240 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் தயிர் அரை லிட்டர் ரூ.25-இல் இருந்து ரூ.27 ஆக அதிகரித்துள்ளது.  

அதேபோன்று ஆவின் பால்கோவா கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. அதன்படி இதுவரை ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பால்கோவா இனி ரூ.520-க்கு விற்கப்படும்.  ஆவின் பன்னீர் கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. அதன்படி பன்னீர் 1 கிலோ ரூ.400-இல் இருந்து ரூ.450 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் டிலைட் பால் அரை லிட்டர்  ரூ.26-இல் இருந்து ரூ.30- ஆகவும், நறுமண பாலின் விலை அரை லிட்டர் ரூ.22-லிருந்து ரூ.25 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த விலை உயர்வு வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும், பால் விலை உயர்வால், பால் பொருள்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT