தமிழ்நாடு

ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு: உண்மை வெளிப்படும்: குடும்பத்தினர் தன்னிலை விளக்கம்

DIN


ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் இறுதியில் உண்மை வெளிப்படும் என்கிற நம்பிக்கை முழுமையாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
 இது தொடர்பாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில நாள்களாக ப.சிதம்பரத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு வருவது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், அந்த அவதூறுக்கு எதிராக ஊடகங்கள் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கு முற்படாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. 
நீதிமன்றத்தால் ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில் இறுதியில் உண்மை வெளிப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.
அப்பழுக்கற்ற 50 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் ப.சிதம்பரம். அவருடைய பணியையும், நாட்டிற்கான பங்களிப்பையும்  இழிவுபடுத்தும் வகையிலான பிரசாரங்களால் போக்கிவிட முடியாது.
எங்களுடைய குடும்பம் சிறியது. தேவையான செல்வத்தைக் கொண்டது. எல்லோரும் வருமான வரி செலுத்தி வருகிறோம். பணத்துக்காக நாங்கள் ஏங்குபவர்கள் அல்ல. 
சட்டத்துக்குப் புறம்பாக பணத்தைத் தேட வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அதனால், பல்வேறு நாடுகளில் எங்களுக்குச் சொத்துகள் இருக்கின்றன, பல்வேறு வங்கிகளில் கணக்குகள் இருக்கின்றன, போலி நிறுவனங்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்துள்ளோம். அவை அனைத்தும் பேய்க் கதைகள் (கட்டுக்கதைகள்) போன்றவை. அவை ஒரு நாள் முடிவுக்கு வரும்.
அரசுக்குச் சவால்: இந்த உலகத்தில் எங்கேயாவது எங்கள் பெயரில், வெளியில் கூறப்படாத வங்கிக் கணக்குகள், சொத்துகள், போலி நிறுவனங்கள் இருப்பதற்கு துளி ஆதாரத்தையாவது அரசால் அளிக்க முடியுமா என்று  சவால் விடுக்கிறோம். 
எனவே,  ஊடகங்கள் உள்பட அனைவரையும் சட்டத்தின் ஆட்சிதான் காக்கும் என்பதை உணர்ந்து,  கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்த ஊடகங்கள் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தமடையில் பெண்கள் அமைப்பு ஆலோசனைக் கூட்டம்

இடிக்கப்பட்ட கிணற்றை மீண்டும் கட்டித் தரக் கோரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

களக்காடு வனப் பகுதியில் மிளா வேட்டை: 2 போ் கைது

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் மா்மமரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT