தமிழ்நாடு

மூடப்பட்ட ஆலைகள்: இயல்பான காவிரியை உணரத் தொடங்கிய மக்கள்

ஊரடங்கு காரணமாக ஆலைகள் மூடப்பட்டதால் கழிவுகள் கலக்காத காவிரி ஆற்றின் இயல்பான நிலையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

கே.விஜயபாஸ்கா்

ஊரடங்கு காரணமாக ஆலைகள் மூடப்பட்டதால் கழிவுகள் கலக்காத காவிரி ஆற்றின் இயல்பான நிலையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் எல்லையாக அமைந்திருக்கும் காவிரி ஆறு தமிழகத்தின் டெல்டா பாசனத்துக்கு உயிர் நாடியாக உள்ளது. கர்நாடகாவிலிருந்து பாய்ந்து வரும் காவிரி பெங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களின் கழிவுகளைச் சுமந்துகொண்டு தமிழகத்தில் கால்பதிக்கிறது. ஒகேனக்கல் பாறைகளில் முட்டி மோதி, மேட்டூர் அணையில் தங்கியிருந்து தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும், வேளாண் தேவை, ஆடு, மாடுகளின் நீராதாரத்துக்கும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் பாய்ந்து வரும் காவிரியில் கழிவுகள் போட்டிப்போட்டுக்கொண்டு கலக்கின்றன.

குடியிருப்பு கழிவுகள் ஒருபுறம், தொழிற்சாலை கழிவுகள் ஒருபுறம் என்ற காவிரியை ஆக்கிரமித்து வந்தன. காவிரியின் துணை ஆறுகளான பவானி, நொய்யல் ஆகியவையும் தங்கள் பங்குக்குத் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகளைக் காவிரியுடன் கலந்து வருகின்றன. நொய்யல் ஆறு 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் தூய்மையான தண்ணீரைத் தந்த ஆறு. ஆனால் சாய, சலவை கழிவுகளால் விவசாயத்துக்கு ஒவ்வாத தண்ணீரைத் தரும் ஆறாக மாறியது. வற்றாத ஜீவநதியாகக் குடிநீரைத் தந்த நொய்யல், வற்றாத கழிவு நீருடன் விஷ நீரைக் கொண்டு வந்து காவிரியுடன் கலக்கிறது. பவானி நதியிலும் பல்வேறு ஆலைகளின் கழிவுகள் வந்து கலந்து காவிரியில் இணைகிறது.

ஈரோடு பகுதியில் சாய, சலவை ஆலைகள், தோல் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாகக் காவிரியில் கலந்து வந்தன. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற கடும் உத்தரவுகளால் இந்த நிலை சற்று குறைந்தது. ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் பல தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து இருந்தாலும், பல நேரங்களில் காவிரியில் தொழிற்சாலை கழிவுகள் திறக்கப்படுவது குறையவில்லை.

220 டி.டி.எஸ் அளவுக்குக் குறைந்த உப்பின் அளவு:

இந்தநிலையில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் 14 நாட்கள் கடந்து விட்டன. இந்த காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கி இருப்பதால் காவிரியில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளும் முடங்கி விட்டன. இதனால் காவிரியில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகக் காவிரியில் உப்பின் தன்மை 600 டி.டி.எஸ்.(மொத்தமாகக் கரைந்து உள்ள திடப்பொருள்) என்ற அளவுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் இது தற்போது 220 டி.டி.எஸ். அளவுக்குக் குறைந்து இருக்கிறது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பவானி கூடுதுறை பகுதியில் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரி தரப்பரிசோதனையில் இந்த அளவு கிடைத்து உள்ளது. இது ஈரோடு அருகே வெண்டி பாளையம் பகுதியில் 230 டி.டி.எஸ். ஆக இருந்தது.  தொழிற்சாலை கழிவுகள் கலக்காததால் காவிரியில் ஓடும் தண்ணீர் சற்று தூய்மை அடைந்துள்ளது என்பதை அறியலாம்.

காவிரி தண்ணீர் பவானி நகருக்கு மேல் தூய்மையாக ஓடி வந்தாலும், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கு வரும்போது பச்சை நிறத்துக்கு மாறி வருகிறது. தற்போது வெண்டி பாளையம் கட்டளை கதவணை மின்சார உற்பத்தி நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காகக் காவிரியில் தண்ணீரைத் தேக்கி வைத்து இருப்பதால், ஏற்கனவே கருப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் இப்போது பச்சை நிறத்துக்கு மாறி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொழிற்சாலை கழிவுகள் கடந்த 10 நாட்களாக கலக்காமலிருந்தாலும், ஏற்கனவே தண்ணீரில் கலந்த கழிவு அப்படியேதான் இருக்கும். எனவே தண்ணீர் ஓடினால் மட்டுமே அது தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ள வழிபிறக்கும் எனக் கூறப்படுகிறது.

குடியிருப்புகளின் கழிவுகள் கலப்பது தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் கூறியதாவது:

ஈரோட்டை பொறுத்தவரை எந்த ஒரு தொழிற்சாலையின் கழிவும் நேரடியாக காவிரியில் கலக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிப்பதில்லை. அனைத்து நிறுவனங்களும் சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளன. அதையும் தாண்டி யாராவது கழிவுகளைக் கலக்கும் பட்சத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலை கழிவுகள்தான் கலக்கவில்லையே தவிர, குடியிருப்புக் கழிவுகள் எந்த தடையும் இன்றி காவிரியில் கலக்கிறது. காவிரி தண்ணீர் தெளிவாக இல்லாமல் பச்சை நிறத்துக்கு மாறி இருப்பதும் இந்த குடியிருப்பு பகுதி கழிவுகளால்தான்.

ஈரோடு மாநகராட்சியைப் பொறுத்தவரை 60 வார்டுகளில் 19 வார்டுகளில் மட்டுமே புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் முழுமையாக இணைப்பு வழங்கப்படவில்லை. அதைத்தவிர்த்து மீதி உள்ள 41 வார்டுகளில் இருந்து வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என்று அனைத்து விதமான கழிவுகளும் பிச்னைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம், சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட ஓடைகள் வழியாக வெண்டி பாளையம் மின் உற்பத்தி கதவணைக்கு மேல் பகுதியில் காவிரியில் தான் கலக்கின்றன.

தற்போது அலுவலகங்கள், சிறு தொழில் கூடங்கள் செயல்படாமல் இருந்தாலும், அனைத்து வீடுகளிலிருந்தும் கழிவுகள் மொத்தமாக காவிரிக்கு தான் வருகின்றன. காவிரியில் தொழிற்சாலை கழிவுகள் நேரடியாகக் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டிய அதே நேரத்தில், குடியிருப்பு கழிவுகள் கலப்பதையும் தடை செய்ய வேண்டும்.

புதை சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சரியாகச் செயல்பட வைப்பதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஓரிரு நாட்களில் காவிரியில் ஒரு தண்ணீர் பரிசோதனை செய்தபோது பவானி கூடுதுறையில் எடுக்கப்பட்ட தண்ணீரை விட ஈரோடு வெண்டி பாளையத்தில் இருக்கும் தண்ணீரில் உப்பின் அளவு அதிகமாக இருக்கிறது. மீண்டும் தண்ணீர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். ஊரடங்கின் இறுதி நாட்களிலும் தண்ணீர் மாதிரி பரிசோதனை செய்யப்படும் என்றார்.

காவிரி ஆற்றின் நிலை இப்போதைய நிலை குறித்து, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, காவிரிக்கரை வழியாக இப்போது சென்றால் தொழிற்சாலை கழிவுகள், சாயக்கழிவுகள் வரும் எந்த தடயமும் இல்லை. ஆனால் குடியிருப்புக் கழிவுகள் வருகின்றன. தண்ணீர் ஓடும் பகுதிகளில் தூய்மையான தண்ணீராகக் காவிரி காட்சி அளிக்கிறது. ஆனால் தேங்கும் இடங்களில் பச்சையாகவே உள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT