முகப்பு
தமிழ்நாடு

வீதியில் திரியும் மனநிலை பிறழ்ந்தவர்களைப் பாதுகாக்க அவசரத் திட்டம் தேவை

ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டை நகரின் வீதிகளில் சுற்றித் திரியும் மன நிலை பிறழ்ந்தவர்களைப் பாதுகாக்க அவசரத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். 

Updated On : 13 ஏப்ரல், 2020 at 8:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:55 PM

ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டை நகரின் வீதிகளில் சுற்றித் திரியும் மனநிலை பிறழ்ந்தவர்களைப் பாதுகாக்க அவசரத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் பொருட்களும் அரசாலும், தன்னார்வலர்களாலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எப்போதும் வீதிகளிலேயே சுற்றித் திரிந்து யாராவது கொடுக்கும் உணவை உண்டு அல்லது குப்பைத் தொட்டியைக் கிண்டி வயிறு வளர்த்து வாழ்ந்து வரும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு காத்திரமான ஏற்பாட்டை யாரும் செய்யவில்லை. தன்னார்வலர்கள் தரும் உணவுப் பொட்டலங்களைத் தவிர.

இந்த வகையில் புதுக்கோட்டை நகரிலுள்ள சாந்தாரம்மன் கோயில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பகுதிகளில் சுமார் 30}க்கும் மேற்பட்டவர்களைக் காண முடியும். பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் நடமாடும் மனநிலை பிறழ்ந்தவர்களும் 15 பேருக்கும் மேல் இருப்பார்கள். பிருந்தாவனம் பகுதியில் சிலரையும், பேராங்குளம் கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிலரையும் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு கரோனா என்றால் என்னவென்றோ, ஊரடங்கு என்றால் என்னவென்றோ தெரியுமா என்பதெல்லாம் சந்தேகமே. 

Advertisement

மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது என்பதை யூகிப்பார்கள். வயிற்றுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதனால் ஏதாவது தோன்றியிருக்கலாம். ஊரடங்கு போன்ற அவசரக் கால நேரத்தில் இவர்களை எங்காவது பாதுகாப்பாகத் தங்க வைப்பது என்பது வெறுமனே இவர்களுக்கு உணவளித்து உயிரோடு இருக்கச் செய்வது மட்டுமல்ல, எப்படியாவது இவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு-இவர்களின் வழியாக பிறருக்குப் பரவிவிடக் கூடாது என்பதும் அடங்கியிருக்கிறது. என்ன செய்யலாம் என்பது குறித்து கடந்த சில நாட்களாக இவர்களுக்கு உணவளித்து வரும் புதுக்கோட்டை நகரின் தன்னார்வலர்களைக் கொண்ட துணைவன் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா கூறியது தொண்டு நிறுவனங்களின் இல்லங்களில் இவர்களைத் தங்க வைக்க முடியாது.

ஏனென்றால் ஏற்கெனவே அங்குள்ளோருக்கு கரோனா பரவிவிடலாம் என்ற அச்சமும் ஒரு புறம். நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியிலும் தங்க வைக்க முடியாது. அதே காரணம் தான். ஆனால் ஒன்று செய்யலாம். இவர்களுக்காக தற்காலிக தங்குமிடத்தை உருவாக்க முடியும். இதை நாங்களே தஞ்சையில் செய்துக் காட்டியிருக்கிறோம். மீட்பு, உதவிப் பணிகளுக்காக தஞ்சை சென்றபோது வீதியில் சுற்றித் திரியும் மனநிலை பிறழ்ந்தவர்களைப் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரைச் சந்தித்தோம். வழிபிறந்தது. மன்னர் சரபோஜி கல்லூரியின் கூட்ட அரங்கைத் தந்தார்கள். 

தஞ்சை நகரைச் சேர்ந்த 95 பேரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தோம். மருத்துவத் துறையினர் மருத்துவப் பரிசோதனை செய்தார்கள். காவல் துறையினர் கனிவாகப் பேசி உணவுகளை வழங்கினார்கள். எல்லாமும் வந்தன. இப்போது மாநிலத்தின் முன்மாதிரியாக தஞ்சை இருக்கிறது. அந்த மக்களிலேயே கொஞ்சம் விவரமானவர்கள் தன்னார்வலர்களாக மாறுகிறார்கள். பணிகளைப் பங்கிட்டுச் செய்கிறார்கள். இவையெல்லாம் சாத்தியம்தான் என்பதை தஞ்சை உணர்த்தியது. அதேபோல, புதுக்கோட்டையிலும் செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும். 

அரசுக் கட்டடங்களில் ஏதாவதொன்றைத் தரலாம். மற்ற துறையினரை உதவி செய்யச் சொல்லலாம். இந்த மக்களை கவனமாக அழைத்து வர நாங்கள் தயார். தினமும் உடனிருந்து பராமரிக்கவும் தன்னார்வலர்கள் தாயாராக இருக்கிறோம் என்கிறார் புதுகை செல்வா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.