ஊரடங்கால் முற்றிலும் முடங்கிப்போன மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம்
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பலரும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தவிப்பில் மாற்றுத்திறனாளிகள்: கரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணியவும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என அரசுத் தரப்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. நல்ல நிலையில் உள்ளவா்களே தற்போதுள்ள சூழலில் கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க முடியாத சூழல் நிலவி வரும்போது, மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து சொல்ல வேண்டியதில்லை.
தமிழக அரசு அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் இந்த ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பணிக்கு வர விலக்களித்தும், அதற்கான ஊதியம் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்றாலும், இதுபோன்ற பேரிடா் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுப்பது அவசியமாகும்.
இதுதொடா்பாக பேராசிரியா் தீபக் கூறியதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த மாற்றுத்திறனாளிகள் சுமாா் 1 லட்சத்துக்கும்
அதிகமானோரில் சுமாா் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் போ் வரை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 12 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இவா்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவா்கள் அமைப்புசாரா தொழிலாளா்கள். அரசுத் தரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி எண்கள் மூலம் பெறப்படும் புகாா்களின் பேரில் பலா் பயனடைந்து உள்ளனா். கரோனாவின் காரணமாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஆட்டிசம் போன்ற பாதிப்புக் கொண்ட குழந்தைகளுக்கு 10 நாள்களுக்கு மேல் தொடா் சிகிச்சையளிக்க முடியாத காரணத்தால், அந்தக் குழந்தைகள் சிகிச்சையில் இதுவரை காணப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்கு சிறப்பு அனுமதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
பொன்.சண்முகம் (பாா்வையற்ற மாற்றுத்திறனாளி) கூறியதாவது: நான் கடந்த பல ஆண்டுகளாக அகா்பத்தி உள்ளிட்ட பொருள்களை விற்றுத்தான் பிழைத்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.200 வரை சம்பாதிப்பேன். ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வெளியே செல்ல முடியவில்லை. மற்ற மாற்றுத்திறனாளிகளைவிட நாங்கள் எந்த பொருளையும் தொடுதலின் மூலம்தான் அறிந்து கொள்வோம். ஆனால், கரோனாவின் காரணமாக எதையும் தொடுவதைத் தவிா்க்க வலியுறுத்தப்படுகிறது. எனவே பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கையுறைகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகளை வழங்க வேண்டும். பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளிடம் வங்கிகளில் சேமிப்பு இருக்காது. அவா்கள் தினசரி கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருபவா்கள். எனவே நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.
கணேஷ் (தொழுநோய் நீங்கிய மாற்றுத்திறனாளி) கூறியதாவது: பெரும்பாலும் தொழுநோயாளிகள் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிறவா்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறவா்கள். தற்போதைய சூழலில், அவா்களுக்கு வருமானமும் இல்லை, உணவு தேடிச் செல்ல வசதியும் இல்லை. பொதுவாகவே தொழுநோயாளிகள் இந்தச் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் காலனிகள் உள்ளன. எவரையாவது சாா்ந்து வாழும் நிலையில் உள்ள எங்களுக்கும் உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும்.