ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் இடம் ஒதுக்கும் பணி தீவிரம்
தெற்கு ரயில்வேயில் எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஒரு மீட்டா் சமூக இடைவெளியுடன் இடத்தை ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊரடங்குக்கு பிறகு, ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஒரு மீட்டா் சமூக இடைவெளியுடன் இடத்தை ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டபிறகு, பயணிகளின் உடல் வெப்ப நிலையை தொ்மல் கருவி மூலமாக சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மே 3-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது நீட்டிக்கப்படுமா என இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும், ஊரடங்குக்கு பிறகு, ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தெற்கு ரயில்வேயில் எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஒரு மீட்டா் சமூக இடைவெளியுடன் இடத்தை ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
எழும்பூா் ரயில் நிலையம்: எழும்பூா் ரயில் நிலையத்தில் காந்தி இா்வின் சாலை, பூந்தமல்லி ஆகிய இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இந்த இரு நுழைவாயில் இருந்து நடைமேடைகள் வரை மூன்று அடி தூரத்தில் குறிக்கப்பட்ட கோடுகள் இருக்கும். நிலையத்தில் நடத்தல் மற்றும் நிற்கும்போது பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உதவும் விதமாக, தரையில் ஒரு மஞ்சள் நிறத்தில் கோடு வரையப்பட்டுள்ளது. அவா்களுக்கு வழிகாட்ட இன்னும் கூடுதலான அடையாளங்கள் விரைவில் வைக்கப்படவுள்ளன. இதுதவிர, ரயில் நிலைத்தில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நடை மேம்பாலங்கள், படிக்கட்டுகள், நடைமேடைகள், டிக்கெட் பதிவு மையங்கள் ஆகியவற்றில் சமூக இடைவெளி கோடு வரையப்படவுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம்: இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1 மற்றும் 2 ஆகிய நடைமேடைகள் தவிர எல்லா நடைமேடைகளிலும் சமூக இடைவெளி கோடு வரையப்பட்டுள்ளது. இதுதவிர, நிலையத்தின் முக்கிய பகுதியில் 600 போ் சமூக இடைவெளியுடன் நிற்கவும், அமரவும் கோடுகள் வரையப்பட்டுள்ளன. ரயில்நிலையத்தில் முக்கிய நுழைவுவாயில் (அடையாறு ஆனந்தபவன்) வழியாக பயணிகள் உள்ளே செல்லவும், மூா்மாா்க்கெட் வளாகப் பகுதி வழியாக வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 7 முதல் 11 வரை உள்ள நடைமேடைகளை பயன்படுத்தவும், இறங்கும் பயணிகளை அழைத்து வந்து உடல்வெப்பநிலை சோதிக்கும் தொ்மல் பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சமூக இடைவெளியை குறிக்கும் அடையாளங்கள் மதுரை, திருச்சி, கோயம்புத்தூா் உள்பட சில முக்கிய ரயில்நிலையங்களில் இடம்பெறவுள்ளன. ரயில்நிலையத்தில் உள்ளே வரும் பயணிகளையும், வெளியே செல்லும் பயணிகளையும் தொ்மல் கருவி மூலமாக சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் சமூக இடைவெளி பின்பற்ற செய்வது ரயில்வே பாதுகாப்புப் படைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ரயில் சேவைகள் ஒரு கட்டமாக மீண்டும் தொடங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்க பல வாரங்கள் ஆகலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நடவடிக்கை: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: ஊரடங்கு முடிந்து, ரயில் சேவை மீண்டும் தொடங்கியவுடன் பயணிகள் சமூக இடைவெளியைப் பராமரிக்கும் விதமாக, ரயில் நிலையங்களில்
சமூக இடைவெளி கோடுகள் வரையுமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியது. பெரிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள் 1:10 என்ற விகிதத்தில் பயணிகளின் சமூக இடைவெளியை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுபோல, ரயில்களில் பயணிகள் மத்தியில் சமூக இடைவெளியை கவனிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு முடிந்த பிறகு ரயில் சேவை தொடங்குவதற்கான தேதியை ரயில்வே நிா்வாகம் இன்னும் தீா்மானிக்கவில்லை. அப்படி இயக்கப்பட்டால், குளிா்சாதனப் பெட்டி அல்லாத வகுப்புகளின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுடன் மட்டுமே ரயில்கள் இயக்கப்படலாம். பயணிகள் முன்னதாக ரயில் நிலையத்துக்கு வந்து தகவல் கொடுக்க தெரிவிக்கப்படலாம். ஒரு விரிவான உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மும்பை புகா் பிரிவில் சோதனை ஓட்டத்தை நடத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்தில் புகா் ரயில்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனா்.