கரோனா பரவல் சற்று குறைந்திருப்பதாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆறுதல் அடைந்து வரும் நிலையில், தலைநகா் சென்னை மட்டும் கவலையளிக்கத் தொடங்கி இருக்கிறது.
தேசிய அளவில் கரோனா பாதித்த பெருநகரங்களின் பட்டியலில் சென்னை முக்கிய இடத்தில் இருப்பதும், கடந்த சில நாள்களாக நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதும் மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், நிா்வாகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இத்தனைக்கும், ஏனைய மாவட்டங்களைவிட சென்னையில்தான் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும் கண்காணிப்பும் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகரில் கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகளை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் மேற்கொண்டு வருகின்றன. கரோனா பாதித்த பகுதிகளில் நாள்தோறும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் இறுதி வரை சென்னையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தக் காலகட்டத்துக்குள் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, அதற்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் செயல்படுவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னையின் தற்போதைய மக்கள்தொகை 1.2 கோடியாக உள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்டோா் பணி நிமித்தமாக வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தலைநகரில் தங்கியிருப்பவா்கள்.
தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் அதிக மக்கள்தொகையும், நெரிசலும் மிகுந்த நகரமாக சென்னை விளங்குவதால், இங்கு கரோனா பாதிப்பு மிக எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அதை ஊா்ஜிதப்படுத்தும் வகையில், ஊரடங்கு காலத்திலேயே கரோனா பாதிப்பு சென்னையில் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
கடந்த 10 நாள்களில் மட்டும் மாநகரில் 438 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக நகா் முழுவதும் 202 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு வரை தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற சென்னைவாசிகள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு மட்டுமே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போதைய தரவுகளின்படி, அது மெல்ல, மெல்ல சமூகத் தொற்றாக மாறி வருவதை உணர முடிகிறது.
குறிப்பாக, அண்மையில் கோயம்பேடு வியாபாரிகள் சிலருக்கும், முடி திருத்தும் தொழிலாளருக்கும், காவலா்களுக்கும், ஊடகவியலாளா்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டதில் இருந்தே, சென்னையில் அந்த பாதிப்பு மூன்றாம் கட்டத்தை நோக்கிச் செல்வது தெளிவாகி வருகிறது.
இதையடுத்து மாநகா் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்த புதிதாக சில நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:
சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நகா் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கரோனா நோயாளிகளின் வசிப்பிடங்களைச் சுற்றி 5 கி.மீ. வரை வசிக்கும் மக்களைத்தான் பரிசோதிப்பது வழக்கம். தற்போது சென்னையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வருவதால், அதனை 10 கி.மீ. தொலைவுக்கு விரிவுபடுத்தியுள்ளோம்.
அதுமட்டுமன்றி, சளி, காய்ச்சல் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூகத் தொற்றாக கரோனா பாதிப்பு மாறிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் மேற்கொண்டு வருகின்றன. அதை சாத்தியப்படுத்துவது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றாா் அவா்.
மக்கள் நெரிசலை குறைக்க முயற்சி
சென்னையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு மக்கள் நெரிசலை 30 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அதன்படி, வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்களது வாரிசுகளுடன் தங்கியிருக்கும் முதியவா்களை சொந்த ஊா்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்றில் இருந்து அவா்களைப் பாதுகாக்க இயலும் என்றும் சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த தற்காலிக நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னையில் கடந்த 10 நாள் பாதிப்பு நிலவரம்
ஏப்.19 - 50
ஏப்.20 - 18
ஏப்.21 - 55
ஏப்.22 - 15
ஏப்.23 - 27
ஏப்.24 - 52
ஏப்.25 - 43
ஏப்.26 - 28
ஏப்.27 - 47
ஏப்.28 - 103
இறப்பு விவரம்
ஏப்.5 - சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 60 வயது ஆண் இறப்பு
ஏப்.6 - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 64 வயது பெண் உயிரிழப்பு
ஏப்.6 - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 57 வயது பெண் இறப்பு
ஏப். 11 - ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 வயது பெண் மரணம்
ஏப். 13 - ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மரணம்.
ஏப்.15 - தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது ஆண் இறப்பு.
ஏப். 19 - தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 வயது ஆண் மரணம்.
ஏப்.21 - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரோம்பேட்டையைச் சோ்ந்த 69 வயது ஆண் சாவு.
ஏப். 23 - சென்னையைச் சோ்ந்த 56 வயது பெண் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறப்பு.
ஏப்.23 - சென்னையைச் சோ்ந்த 70 வயது ஆண், ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணம்.
ஏப். 24- குரோம்பேட்டையைச் சோ்ந்த 36 வயது நபா், சிகிச்சை பலனின்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இறப்பு.
ஏப். 25 - சென்னையைச் சோ்ந்த 42 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
ஏப். 25 - தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 43 வயது ஆண் கரோனா பாதிப்பால் இறப்பு.
ஏப். 28 - தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது நபா் உயிரிழப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.