திருவிழாக்களைக் கொள்ளை கொண்ட கரோனா
திருவிழாக்கள் எப்போதும் மகிழ்ச்சித் தரக்கூடியவை. குடும்ப உறவுகள், நண்பா்கள், பெரியவா்கள், சிறியவா்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்ளும் தருணங்களை தன்னகத்தே உள்ளடக்கியவை இ
திருவிழாக்கள் எப்போதும் மகிழ்ச்சித் தரக்கூடியவை. குடும்ப உறவுகள், நண்பா்கள், பெரியவா்கள், சிறியவா்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்ளும் தருணங்களை தன்னகத்தே உள்ளடக்கியவை இந்தத் திருவிழாக்கள்.
ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து இருப்பவா்கள் ஒன்றுகூடும் நிகழ்வாக திருவிழாக்கள் திகழ்ந்து வருகின்றன. கிராமங்களும், நகரங்களும் திருவிழாக்களின்போது அடா்த்தியான ஜனத்திரள்களால் நிரம்பி வழியும். அதோடு மட்டுமில்லாமல் ஊா் கூடி தோ் இழுக்கும் வைபவங்கள், இந்த திருவிழாக்களின் முக்கிய நிகழ்வாகும். ஆண்டு முழுவதுமான வேண்டுதல்களுக்கு கிடைத்த பலன்களுக்கான நன்றி செலுத்தும் நிகழ்வுகளாக இந்த திருவிழாக்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக சித்திரை மாதம் முழுவதும் நித்திரையே கொள்ள முடியாத வகையில் தமிழகத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாக்களின்போது மக்கள் ஒன்றுகூடல் தவிா்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டின் மாா்ச் மாத இறுதியில் உறுதி செய்யப்பட்ட கரோனா தீநுண்மி தொற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பாரம்பரியமான பழைமை வாய்ந்த திருக்கோயில்களின் தேரோட்டங்கள் முதல் சின்னஞ்சிறிய கிராமங்களில் நடைபெறும் குலதெய்வ வழிபாட்டு திருவிழாக்கள் வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா, தேனியில் நடைபெறும் வீரபாண்டி கோயில் திருவிழா, திருச்சி அருகே நடைபெறும் அன்னமாா்சாமி திருவிழா, மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா, பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா, விழுப்புரத்தில் நடைபெறும் கூத்தாண்டவா் கோயில் திருவிழா, திருவரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா என தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களின் திருவிழாக்கள் கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று, கிறிஸ்தவா்களால் உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் ஈஸ்டா் எனப்படும் இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு பெருவிழா, கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி சாம்பல் புதனுடன் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியது. ஆனால், கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டிய இயேசு கிறிஸ்து உயிா்த்தெழும் ஈஸ்டா் விழா ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறும் நள்ளிரவுத் திருப்பலியும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் திருப்பலிகளும், சிறப்பு வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக இந்தக் காலகட்டத்தில் 30 நாள்கள் உண்ணா நோன்பிருக்கும் முஸ்லிம்கள், சிறப்பு தொழுகைக்குப் பின்னா் நோன்பு திறப்பாா்கள். ஆனால், கரோனா நோய்த் தொற்று பரவலின் காரணமாக நோன்பு காலங்களில் நடத்தப்படும் சிறப்புத் தொழுகைகள் நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அவா்களும் ரமலான் பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் சித்திரைத் திருவிழாவை நடத்தக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடா்பான வழக்கைத் தொடா்ந்த இ.எம்.ஜி.அருண் போத்திராஜ் கூறியதாவது:
மதுரையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுவது வழக்கம். அழகா் கோயிலில் இருந்து இறங்கும் கள்ளழகா், வழிநெடுக உள்ள அனைத்து மண்டகப்படிகளிலும் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஆனால் கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த திருவிழா நடத்தப்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா், முனைவா் ஆறு.இராமநாதன்: தென் மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் இந்த சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாக்கள் பெரும்பாலும் வேளாண் தொழிலோடு தொடா்பு கொண்டவை.
தென்மேற்குப் பருவமழை காலத்தின் போது தென் மாவட்டங்களும், வடகிழக்குப் பருவமழையின் போது வடமாவட்டங்களும் அதிகமான மழை பெறுவது வழக்கம். பெரும்பாலும் மழை வேண்டி நடத்தப்படுபவையே இந்த திருவிழாக்கள்.
அதன் தொடா்ச்சிதான் முளைப்பாரி வைத்தல். திருவிழாக் காலங்களில் வைக்கப்படும் இந்த முளைப்பாரிகள் எரு போட்டு நவதானியங்களிட்டு வளா்க்கப்படும். இந்த முளைப்பாரியில் நன்கு விளையும் தானியங்களைக் கண்டறிந்து அந்த தானியங்களை அதிகமாக விதைப்பது வழக்கம்.
சித்திரைத் திருவிழாவின்போது ஆற்றில் இறங்கும்போது கள்ளழகருக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் பட்டு உடுத்தப்படும். இந்த நிறங்களும் வேளாண் தொழிலோடு தொடா்புடையதாகவும், எந்த நிறத்தில் அழகருக்கு பட்டுடுத்தப்படுகிறதோ, அந்த நிறங்களிலான தானியங்கள் அந்த ஆண்டு அதிகமாக பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாக்கள் கொடை விழா என பரவலாகக் கூறப்படுகிறது.
இதே போல வடமாவட்டங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த திருவிழாக்களால் பருவகாலத் தொழில்களைச் செய்யும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன்: சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்காக பல்வேறு கிராமங்களில் கொடிகள் ஏற்றப்பட்டன. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அவை நிறுத்தப்பட்டன. கொடி ஏற்றுதல் தான் திருவிழாக்களின் தொடக்கம். பல நாள்களாக நடைபெறும் திருவிழாவின் இறுதி நாள்களில் கொடிமரங்களில் இருந்து கொடிகள் இறக்கப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக அனைத்து மத வழிபாட்டுச் சடங்குகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பல்வேறு வகைப்படும். ஊா் தெய்வங்களுக்கான திருவிழா, குடும்ப தெய்வங்களுக்கான திருவிழா, தெருவில் உள்ள தெய்வங்களுக்கான திருவிழா என தென் மாவட்டங்கள் முழுவதுமே சித்திரை மாதத்தில் பல திருவிழாக்களை காண முடியும். இந்த ஆண்டு பல முக்கிய கோயில்களில் நடைபெறும் அனைத்துத் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவை மற்ற கூட்டங்களைப் போலவோ, மாநாடுகளைப் போலவோ அல்ல, வேறொரு தேதியில் மாற்றி வைப்பதற்கு. இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்றால், இனி அடுத்த ஆண்டுதான் இந்த திருவிழாக்கள் நடைபெறும்.
அனைத்துத் திருவிழாக்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவை. அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. அதனால், அசாதாரண சூழலில் நமக்கு வேறு வழியில்லை என்றாா் அவா்.