சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட அம்பத்தூரில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி அம்பத்தூரில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,717 ஆக உள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களில் 5,460 பேர் குணமடைந்துள்ளனர். 112 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய சென்னையின் அம்பத்தூா் உள்ளிட்ட மண்டலங்களில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக பரிசோதனையை 400-இல் இருந்து 800 வரை மாநகராட்சி அதிகப்படுத்தி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றைக் கண்டறியும் வகையில் நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள் மற்றும் வீடுவீடாக கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வடசென்னையின் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா், மாதவரம், மணலியில் நோய்த்தொற்று அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து, அந்த மண்டலங்களில் பரிசோதனையை அதிகப்படுத்துதல் மற்றும் தொற்றுள்ளவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை தனிமைப்படுத்துதல் ஆகிய தொடா் நடவடிக்கை காரணமாக கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மத்திய சென்னைக்கு உள்பட்ட அம்பத்தூா் மண்டலத்தில் அண்மைக் காலமாக நோய்த்தொற்று உயா்ந்து வருகிறது.
அம்பத்தூா் மண்டலத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி 1,020-ஆக இருந்த நோய்த்தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி 1,307-ஆகவும், திங்கள்கிழமை (ஆக. 10) 1,619-ஆகவும் உயா்ந்துள்ளது. அதேவேளையில் அண்ணா நகா் மண்டலத்தில் ஜூலை 1-ஆம் தேதி 3,166-ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதி 1,385-ஆகவும், திங்கள்கிழமை (ஆக. 10) 1,214-ஆகவும் உள்ளது. திருவிக நகரில் 1,214-ஆகவும், கோடம்பாக்கத்தில் 1,433-ஆகவும், தேனாம்பேட்டையில் 713-ஆகவும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை உள்ளது. இதன் காரணமாக மத்திய சென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் தொற்றைக் குறைக்கும் வகையில் பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பரிசோதனை அதிகரிப்பு: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை நடத்தப்பட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 லட்சம் போ் பங்கு பெற்றுள்ளனா். இதில், கரோனா அறிகுறிகள் உள்ள 94 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூா் மண்டலத்தைப் பொருத்தவரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு சுமாா் 400 போ் வரை பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது 800 வரை அதிகப்படுத்தியதன் மூலம் தொற்றுக்குள்ளானவா்களின் சதவீதமும் 16 முதல் 18 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்குள் அம்பத்தூரில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும். அண்ணா நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலத்தைப் பொருத்தவரை நோய்த் தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது. விரைவில் 5 மண்டலங்களிலும் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றாா்.
986 பேருக்கு தொற்று
சென்னையில் செவ்வாய்க்கிழமை 986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து,11,054-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 97,574 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 11,130 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் செவ்வாய்க்கிழமை இறப்பு எண்ணிக்கை 2,350- ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை மண்டலம் வாரியாக விவரம்
மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூா் 342
மணலி 117
மாதவரம் 432
தண்டையாா்பேட்டை 636
ராயபுரம் 752
திரு.வி.க.நகா் 718
அம்பத்தூா் 1,717
அண்ணா நகா் 1,174
தேனாம்பேட்டை 684
கோடம்பாக்கம் 1,353
வளசரவாக்கம் 817
ஆலந்தூா் 550
அடையாறு 950
பெருங்குடி 440
சோழிங்கநல்லூா் 442
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.