மன்னார்குடியில் லாரி மீது சுமை வேன் மோதியதில் 4 பேர் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே , சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் ஜல்லி பாரத்துடன் நின்று கொண்டிருந்த லாரி மீது, இறைச்சி கோழிகள் ஏற்றி வந்த வேன் மோதியதில், சுமை வேனின் மாற்று ஓட்டுநர் மற்றும்
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே , சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் ஜல்லி பாரத்துடன் நின்று கொண்டிருந்த லாரி மீது, இறைச்சி கோழிகள் ஏற்றி வந்த வேன் மோதியதில், சுமை வேனின் மாற்று ஓட்டுநர் மற்றும் 3 தொழிலாளிகள் என 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூரிலிந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு மன்னார்குடிக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மன்னார்குடி ,தஞ்சாவூர் பிரதான சாலை நெடுவாக்கோட்டை என்ற இடத்தில், லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கரூரை அடுத்துள்ள பொன்னி மாந்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜ் (53) லாரியின் சக்கரத்தில் காற்றின் அளவினை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது , கோவை மாவட்டம் பல்லடத்திலிருந்து திருந்துறைப்பூண்டிக்கு இறைச்சி கோழிகளை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்த சுமை வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையேரம் ஜல்லி பாரத்துடன் நின்ற லாரியின் பின் பக்கம் மோதியது.
இதில், சுமை வேனில் இருந்த மாற்று ஓட்டுநர் திருப்பூர் மாவட்டம் நந்த பாளையத்தை சேர்ந்த கந்தன் (25), தொழிலாளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வெங்கடராமன் (35) உடனடியாக பெயர்,விவரம் தெரிய வராத மேலும் இரண்டு தொழிலாளர்கள் என மொத்தம் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
சுமை வேன் ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம் மூலனூர் ஆர். ரமேஷ் (35), லாரி ஓட்டுநர் நாகராஜ் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய காவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.