தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டம் வெறிச்சோடியது
தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது. சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது. சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு, படிப்படியான தளர்வுகளுடன் அமலில் உள்ளது. எனினும், வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் வந்த நான்கு கிழமைகளிலும் தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது இதையொட்டி இந்த மாதம் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி ஈரோட்டில் இன்று 8- வது வாரமாக தளர்வில்லாத ழுழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. 50 ஆயிரம் விசைத்தறிகள், தொழிற்சாலைகள், 10 ஆயிரம் ஜவுளிக்கடைகள், 206 டாஸ்மாக் கடைகள், நேதாஜி காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட், உழவர் சந்தைகள், நகைக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.
ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், காந்தி ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், காளைமாடு சிலை, சென்னிமலை ரோடு போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால், அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்தகம் வழக்கம்போல் செயல்பட்டது . மேலும், அம்மா உணவகமும் வழக்கம் போல் செயல்பட்டன. முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சோதனைச் சாவடிகளில் போலீஸார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்கள் அனைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஊரடங்கை மீறி ஒரு சிலர் வெளியே சுற்றுவதை காண முடிந்தது. சிலரது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, பவானிசாகர் உட்பட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.