முகப்பு
தமிழ்நாடு

பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வந்த விவகாரம் : உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
பகிர்:

சென்னை: தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு  அனுப்பிய நோட்டீஸை  ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும், இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைக்குழு நோட்டீசுக்கு தடை விதித்தது.இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில்மனுவில், உரிமைக்குழு நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை. பேரவைத் தலைவரின் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சபைக்குள் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கொண்டு வந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஜெ.அன்பழகன் மற்றும் கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாலும், கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறி எஞ்சிய 18 பேர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அமித் ஆனந்த் திவாரி, ஆர். சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

தமிழக அரசின் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர்  விஜய் நாராயண் மற்றும் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு சார்பி்ல் அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞர் ஏ.எல்.சோமயாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

இதேப்போன்று எம்எல்ஏ கு.க.செல்வம் தரப்பில் இந்த வழக்கில் திமுகவின் வாதத்தையே தனது வாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இன்று பிறப்பித்த உத்தரவில்,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை  ரத்து செய்து உத்தரவிட்டனர். உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸில் சில அடிப்படை தவறுகள் உள்ளதால், உரிமைக்குழு திமுக உறுப்பினர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →