முகப்பு
தமிழ்நாடு

'திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு'

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும், இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைக்குழு நோட்டீசுக்கு தடை விதித்தது.இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில்மனுவில், உரிமைக்குழு நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை. பேரவைத் தலைவரின் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சபைக்குள் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கொண்டு வந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இன்று பிறப்பித்த உத்தரவில்,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டனர். உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸில் சில அடிப்படை தவறுகள் உள்ளதால், உரிமைக்குழு திமுக உறுப்பினர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டப்பேரவை ஜனநாயகத்தை சென்னை உயர்நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.  எம்எல்ஏக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்னைகளையும்  சட்டப்பேரவையில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், சென்னை உயர்நீதிமன்றம் அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 

குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது தமிழக முதல்வர் பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →