புழல் ஏரியில் உபரி நீர் திறக்க நடவடிக்கை: கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
புழல் ஏரி நிரம்பி வருவதால் வெள்ளிக்கிழமை மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருந்து வருவோர் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் ஏரி நிரம்பி வருவதால் வெள்ளிக்கிழமை மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருந்து வருவோர் பாதுகாப்பாக இருந்து கொள்ளவும் ஆட்சியர் பா.பொன்னையா வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மேல் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிக்குப்பம, வடகரை, கிராண்டலைன, புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி, மற்றும் சடையான்குப்பம் வழியாகச் செல்லும். எனவே, அக்கரையோரம், தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அப்பகுதியில் பொதுத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறையினர் பாதுகாப்புப் பணியில் தயார் நிலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.