கம்பம்: தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லை குமுளியில் சாலையோரத்தில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வைத்திருந்த கடைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ளது குமுளி கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ளது. தமிழக எல்லையில் உள்ள குமுளி சாலையின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் புதிய தார் சாலை அமைப்பதற்காக கடைகளை அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதன் பின்னர் குமுளி காவல் நிலையத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை அகற்றி விடுவதாக கூறினார்.
புதன்கிழமை கடைகளை அகற்ற குமுளிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தினர் வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்பு கடைகளின் உரிமையாளர்கள், 25 ஆண்டு காலமாக கடைகளை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் மாற்று இடம் வேண்டும் என்று கோரி முற்றுகையிட்டனர்.
இதற்கிடையில் ஜேசிபி வாகனங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அகற்ற தொடங்கினர்.
அப்போது இயந்திரத்தை முற்றுகையிட்ட ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை பிடித்து தொங்கிக்கொண்டு கடைகளை அகற்றக் கூடாது என்று போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், குமுளி காவல் ஆய்வாளர் முத்துமணி மற்றும் காவலர்கள் போராட்டம் செய்தவர்களை அகற்றினார்கள். அதன் பின்னர் கடைகள் அகற்றப்பட்டது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலரிடம் கேட்டபோது, தமிழக-கேரள எல்லையில் மத்திய அரசு அலுவலர் ஒருவர் வரும்போது எல்லைப் பகுதி மிகவும் மோசமாக இருப்பதை பார்த்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தார் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.
கடந்த 25 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.