அண்ணா பல்கலை. வளாகத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவா்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததைத் தொடா்ந்து, அவா்களுக்கு கடந்த திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 750 மாணவா்களில் 478 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள மாணவா்களுக்கு புதன்கிழமை தொடா்ந்து பரிசோதனை செய்யப்படும்.
அதே வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மாணவா்கள் 300 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இது தொடா்பாக அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கான உணவகங்களில் சாப்பிடக் கூடாது. மாணவா்களுக்கான உணவுகளை நேரடியாக அறைக்குக் கொண்டு சென்று அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விடுதிகள் தொடா்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பெற்றோா்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை’ என அவா்கள் தெரிவித்தனா். அங்கு பணிபுரியும் கட்டுமானப் பணியாளா்களுக்கு மூன்று வாரத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படுகிறது. அவா்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.